பத்திரப்பதிவு முறைகேடுகளைத் தவிர்க்க கண்காணிப்பு: வருகிறது புதிய வசதி


பத்திரப்பதிவு முறைகேடுகளைத் தடுக்க, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார் பதிவு அலுவலகங்களையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க, கேமரா வசதி செய்யப்படுகிறது. இதில் பதிவாகும் வீடியோவை, பொதுமக்கள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

மோசடிகளை தடுக்க...: நில மோசடி, சொத்துக்களை பதிவு செய்வதில் ஆள் மாறாட்டம் என, சொத்து ஆவணப் பதிவு தொடர்பான மோசடிகள் நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 575 சார் பதிவாளர் அலுவலகங்களும், மூன்று முகாம் அலுவலகங்களும் உள்ளன. சொத்துக்கள் தொடர்பாக, "பவர்' வழங்கும் போது, உரிமையாளர் மட்டுமே புகைப்படம், விரல் ரேகை பதிவு செய்தால் போதும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, "பவர்' பெறுபவரும் புகைப்படம், விரல் ரேகை போன்றவற்றை பதிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக, அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களையும், "ஐ.பி.கேமரா' எனப்படும், சர்வதேச தரத்துடன் கூடிய கண்காணிப்பு கேமரா மூலம் இணைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சண்முகம் சட்டசபையில் அறிவித்தார். சார் பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

கண்காணிப்பு: இந்த கேமராக்கள் இணையதளம் மூலமாக இணைக்கப்பட்டு, சென்னையில் உள்ள பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்தபடி, 575 சார் பதிவாளர் அலுவலகங்களிலும் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும்.
கணினிமயமாக்கும் திட்டம்இந்த வசதி குறித்து அமைச்சர் சண்முகம் கூறிய தகவல்: இந்த, "ஐ.பி.கேமரா' என்பது சர்வதேச கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் கருவி. ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழையும் போதே இந்த கேமரா அவரை படம் எடுத்து விடும். சார் பதிவாளர் அருகில் ஒரு கேமரா இருக்கும். அது, பத்திரப்பதிவு நடைபெறுவதை படம் எடுக்கும்; பத்திரத்தின் விவரங்களும் அதில் பதிவாகி விடும். புரோக்கர்கள் நடமாட்டம், போலி ஆவணம், சதி திட்டம் போன்றவைகளை தடுக்க, இந்த கேமரா எடுக்கும் வீடியோ படங்கள் உதவும். பத்திரப் பதிவு தொடர்பாக ஏதேனும் சர்ச்சைகள் வரும்போது, இந்த வீடியோ பதிவை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். பதிவு அலுவலகங்களில் அதற்குரிய கட்டணங்கள் செலுத்தினால், அந்த வீடியோ பதிவுகள் வழங்கப்படும். மேலும், பத்திரப்பதிவு அலுவலகங்களை கணினிமயமாக்கும் திட்டம், 117 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் செயலுக்கு வந்ததும், முறைகேடுகள் முழுமையாகத் தடுக்கப்படும்.

No comments: