டிரைவர் இல்லாமல் இயங்கும் கூகுள் காரை சாலையில் இயக்க அனுமதி

கூகுள் வடிவமைத்துள்ள தானியங்கி காரை சாலையில் இயக்கி சோதனை நடத்த அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.

டிரைவர் கட்டுப்பாடு இல்லாமல் செல்லும் தொழில்நுட்பம் கொண்ட தானியங்கி காரை கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. சென்சார், கேமரா மற்றும் செயற்கைகோள் உதவியுடன் தானியங்கி முறையில் செல்லும் கையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, சோதனை ஓட்ட மையத்தில் இந்த தானியங்கி காரை இயக்கி சோதனைகள் நடத்தப்பட்டன. கர்சன் மற்றும் லாஸ் வேகாஸ் பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சாலைகளில் இயக்கி சோதனைகள் நடத்தப்பட்டன.

அடுத்த கட்டமாக சாலைகளில் இயக்கி சோதனைகள் மேற்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறையிடம் அனுமதி கோரியிருந்தது. இந்த காருக்கு சாலையில் இயக்கி சோதனைகள் நடத்துவதற்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து நெவடா மாகாண போக்குவரத்து துறை தீவிரமாக பரிசீலித்து வந்தது.

புதிய விதிமுறைகளுடன் தானியங்கி காரை சாலைகளில் இயக்கி சோதனைகள் நடத்த தற்போது நெவடா போக்குவரத்து துறை அந்த காருக்கு லைசென்ஸ் வழங்கியுள்ளது. கார் எந்தெந்த சாலைகளில் செல்லும் என்பது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க கூகுள் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சோதனை செய்யப்படும் காருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் நெவடா போக்குவரத்து துறை கூறியுள்ளது. டொயோட்டோ பிரையஸ் கார்தான் தற்போது கூகுளின் தானியங்கி தொழில்நுட்பம் கொண்டதாக மாற்றப்பட்டு சாலைகளில் இயக்கப்பட உள்ளது.

No comments: