குழந்தைகள் கண் சிகிச்சைக்கு உதவ தன்னார்வ அமைப்பு - ரஜினி தொடங்கி வைத்தார்

"சிஸ்டிநோசிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவுவதற்கான தன்னார்வ அமைப்பினை சென்னையில் தொடங்கிவைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் "சிஸ்டிநோசிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள "சிஸ்டகான்' மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

'சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' என்ற பெயரில் நாட்டிலேயே முதன்முறையாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாகப் பங்கேற்ற ரஜினி, தனது ஆதரவை இந்த அமைப்புக்குத் தெரிவித்தார்.

சிஸ்டிநோசிஸ் நோய் குறித்து மியாட் மருத்துவமனை சிறுநீரக மருத்துவ துறைத் தலைவரும், "சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' தலைவருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறுகையில், "சிஸ்டிநோசிஸ்' என்பது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மரபணு சார்ந்த அரிய வகை நோயாகும். உலகம் முழுவதும் இந்த நோயால் 2 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எவ்வளவு குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது என்பது தெரியவில்லை. மொத்தம் 6 குழந்தைகளுக்கு இந்த அரிய நோய் பாதிப்பு உள்ளது "சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' அமைப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்தவுடன் இந்த நோய் பாதிப்பு தெரியாது. எனினும் குழந்தை வளரும்போது உரிய காலத்தில் வளர்ச்சி இல்லாத நிலையில், சிறுநீர்ப் பரிசோதனையில் சர்க்கரை இருந்தாலோ அல்லது அமினோ அமிலம் வெளியேறினாலோ இந்த நோய் குறித்துச் சந்தேகப்பட வேண்டும்; உடனடியாக

குழந்தையின் விழி வெண்படலம் ("கார்னியா') நன்றாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள குழந்தையை கண் மருத்துவரிடம் அனுப்பி சிறப்புப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

முன்கூட்டியே இந்த நோயைக் கண்டுபிடித்துவிட்டால் குழந்தைக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து அதன் வளர்ச்சியை உறுதி செய்து காப்பாற்ற முடியும்.

இப்போது இரண்டு குழந்தைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு குழந்தைகளின் மருந்துச் செலவுக்கு உரிய தலா ரூ.2 லட்சம், நன்கொடை மூலம் திரட்டப்பட்டு வருகிறது," என்றார்.

இந்த அமைப்பு குறித்த விவரங்களை www.sugarbp.org இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments: