ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் ட்விட்டரில் 'மிரட்டல்'

கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டனர், நடிகை ஸ்னேகாவும் நடிகர் பிரசன்னாவும். ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்து, விவிஐபிக்களை அழைத்து ஓய்ந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். 

இருவரும் சந்தித்துக் கொண்டது, காதல் வளர்த்தது, பெற்றோரின் சம்மதத்துக்குக் காத்திருந்தது, சாதிகளை மீறி திருமணத்துக்கு சம்மதம் வாங்கியது என இத்தனை நாட்களும் மீடியாவில் அரைபட்ட செய்திகள் கேள்விகள், பதில்களாக ஓடிக் கொண்டிருந்தன... 

பிரசன்னா, ஸ்னேகா திருமணம் வருகிற 11ம் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது.

தம்பதிகளாகப் போகும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தோம். வாய் நிறைந்த புன்னகையுடன் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தனர் இருவரும்.

அவர்களின் திருமணத் திட்டங்கள், திருமணத்துக்குப் பிந்தைய திட்டங்கள் குறித்து நம்மிடம் கூறியதாவது: 

இந்தத் திருமணத்தை பிரசன்னாதான் முதலில் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு நீங்கள் எதுவுமே சொல்லாமல் அமைதி காத்தீர்களே?

ஸ்னேகா: இருவரும் சேர்ந்து அறிவிக்கத் திட்டமிட்டிருந்தோம். அது கொஞ்சம் முன்கூட்டியே வந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு நானே ஒரு பேட்டியில் சொல்லிவிட்டேனே.

உண்மையை சொல்லுங்கள். நீங்கள் எத்தனை வருடங்களாக காதலித்தீர்கள்? அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பிருந்தே காதலா?

பிரசன்னா: அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பு அவரைப் பிடிக்கும். அந்தப் படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்களாகக் காதலித்தோம். எங்கள் 2 பேரின் வீட்டிலும் சம்மதித்தபிறகுதான், காதல் பற்றி வெளியில் சொல்ல ஆரம்பித்தோம்.

பிரசன்னாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

ஸ்னேகா: அவரது உண்மையான காதல். அந்தக் காதலை எப்போதும் ஒரே மாதிரி அவர் கொண்டாடும் விதம். எனக்கு மிகப் பொருத்தமான இணை அவர் என முடிவு செய்த பிறகே காதலை ஒப்புக் கொண்டேன். 

மாமனார் மாமியார் பற்றி...

ஸ்னேகா: அதை கண்டிப்பாக நான் சொல்லியாக வேண்டும். எனக்கு மாமனார்-மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே பிரசன்னாவின் பெற்றோர் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் ஆறு மாத காலம் தனிக்குடித்தனம் இருக்கிறோம். பின்னர் அனைவரும் ‌ஒரே குடும்பத்தில் சேர்ந்து இருப்போம். 

எதிர்காலத் திட்டங்கள்...

ஸ்னேகா: என்ன திட்டம்... ஓ குழந்தைகள் பற்றியா... அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. கொஞ்சம் ரிலாக்ஸ்டாகத்தான் அதை முடிவு செய்வோம். நிறைய கமிட்மென்ட்ஸ் உள்ளன. எல்லாவற்றையும் முடித்த பிறகே குழந்தைகள்.

ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் உங்களுக்கு மிரட்டல் வந்ததாமே...

பிரசன்னா: அட ஆமாங்க. ட்விட்டர் வலைதளத்தில் சிலர் எங்கள் புன்னகை அரசியையா கல்யாணம் செய்ய போகிறாய் என்று மிரட்டினர். ஆனால் அந்த மிரட்டலை நான் புன்னகையோடு வரவேற்கிறேன். அவர்களுக்கு நான் சொல்வது, திருமணத்திற்கு பிறகும் ஸ்னேகாவை புன்னகை அரசியாகவே பார்த்துக் கொள்வேன் என்றார்.

பின்னர், "எல்லாரும் திருமணத்துக்கு தவறாம வந்துடுங்க, வாழ்த்துங்க", என்றனர் இருவரும்.

No comments: