கரூரில் வாடிக்கையாளர்களை இழந்து வரும் பி.எஸ்.என்.எல்

 கரூரில் மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் செயல் இழந்து வருவதால் தங்களது நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்..

கரூர் மாவட்டமானது ஜவுளித் தொழில், பேருந்து கட்டுமானப் பணி, கொசுவலை மற்றும் சாயப்பட்டறை போன்ற பல தொழில்களை உள்ளடக்கியதாகும். இந்தத் தொழில்களை நம்பி பல லட்சம் பேர் பிழைத்து வருகின்றனர்.

தொழில் நகரமான கரூரில் தொடக்க காலத்தில் தொழில் அதிபர்களுக்கு கை கொடுத்தது அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.தான். இந்நிறுவனத்தின் அனைத்து சேவைகளையுமே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அண்மைக்காலமாக பி.எஸ்.என்.எல். நிறுவன பணியாளர்களின் முகம் சுளிக்க வைக்கிற செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்துவதை தவிர்ப்போரின் எண்ணிக்கை தவிர்க்க முடியாமல் உயர்ந்து வருகிறது.

இதைப் பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுவதுடன் வாடிக்கையாளர்களின் குறைகளையும் உடனே நிவர்த்தி செய்து விடுகிறது. இது தொடர்பாக புகார் கொடுக்க திருச்சி பொது மேலாளர் அலுவலகத்தின் எண் 0431 - 2460000 ஐ தொடர்பு கொண்டால் பொது மேலாளர் வெளியே சென்றுள்ளார் என்ற பதிலே மீண்டும் மீண்டும் வருகின்றது.

தனியார் நிறுவனங்கள் லாபமடைவதற்காகவே பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதே நிலைமை நீடிக்குமேயானால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும் என்கிறார்கள் 'கஷ்டமர்கள்'!

No comments: