3 படத்தின் வர்த்தகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை-ரஜினிகாந்த்

 3 படத்தின் வர்த்தகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. இதுகுறித்து வெளியானவை பொய்ச் செய்திகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க, மருமகன் தனுஷ் - ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு வெளியீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால, அதை ஈடுகட்டுவதில் உதவ ரஜினி முன்வந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இது முழுக்க தவறான செய்தி என ரஜினியே தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது மகள் ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ், ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான `3' திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்பந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கும், எனக்கும் வியாபார ரீதியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட வினியோகஸ்தர்கள் யாரும், என்னை சம்பந்தப்படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

No comments: