கை கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!- 3 சிக்கல்

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பிலும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்திலும் உருவாகி பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான 3 படம் பிளாப் என்பது கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாகி விட்டது. தெலுங்கில் இந்தப் படம் மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளதாம். இதனால் நாலாபுறமும் தனுஷை நிதி சிக்கல் நெருக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மருமகனை இந்த சிக்கலிலிருந்து காக்க கை கொடுத்துள்ளாராம்.

கொலவெறி பாடல் ஏற்படுத்திய மிகப் பெரிய ஹைப் மற்றும் பரபரப்புக்கு மத்தியில் வெளியான 3 படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் படம் நன்றாகப் போவதாக செய்திகள் வெளியானாலும் கூட படம் பிளாப் என்று இப்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான தியேட்டர்கள் காற்று வாங்க ஆரம்பித்துள்ளதாம். வார இறுதி நாட்களிலும் கூட பல தியேட்டர்களில் திணறித் திணறித்தான் கூட்டம் கூடுகிறதாம்.

இந்த நிலையில் 3 படத்தால் சிக்கல்களில் சிக்க ஆரம்பித்துள்ளாம் தனுஷ் குடும்பம். இந்தப் படத்தை தனுஷ் குடும்பம்தான் தயாரித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். குறிப்பாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டி குமாரால் சிக்கல் உருவெடுத்திருப்பதால், மகளையும், மருமகனையும் பத்திரமாக காப்பாற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியே களத்தில் குதிக்க நேரிட்டுள்ளதாம்.

ரஜினிகாந்த் இப்படி பண உதவி செய்வது என்பது புதிதல்ல. ஏற்கனவே குசேலன் படம் தொடர்பாக இப்படி ஒரு சிக்கல் வந்தபோது சற்றும் தயக்கமில்லாமல் நஷ்டக் கணக்கை தனது சொந்தப் பணத்தை வைத்து சரி செய்து கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியவர் அவர் என்பது நினைவிருக்கலாம். தற்போது மருமகன் தனுஷுக்கும் அவர் கை கொடுத்துள்ளாராம்.

3 படத்தின் ஆந்திர விநியோக உரிமையை வாங்கியவரான நட்டி குமார்தான் 3 படம் தொடர்பாக முதல் குண்டைப் போட்டவர். தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதற்கு தனுஷ், ஐஸ்வர்யாதான் காரணம் என்றும் பரபரப்பாக குற்றம் சாட்டினார் நட்டி. ரூ. 4 கோடிக்கு இந்த நட்டி குமார் படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

3 படம் தொடர்பாகவும், நட்டி குமாரின் குற்றச்சாட்டு காரணமாகவும் வெளி வரும் செய்திகள் ரஜினியை அப்செட் செய்துள்ளதாம். இதை அவர் விரும்பவில்லையாம். எனவே இந்தப் பிரச்சினை சட்டென்று சரி செய்து விட வேண்டும் என்று அவர் விரும்புகிறாராம். இதனால் நஷ்டப் பணத்தைக் கொடுத்து பிரச்சினையை தீர்க்குமாறும், அந்தப் பணத்தைத் தானே தருவதாகவும் ஐஸ்வர்யா, தனுஷிடம் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக நட்டி குமார் தனது மகள், மருமகனால் நஷ்டப்பட்டுப் போனேன் என்று கூறியது ரஜினியை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம். இதையடுத்தே இந்த முடிவுக்கு வந்தாராம் ரஜினி. ரஜினியின் இந்த முடிவை ஐஸ்வர்யாவும், தனுஷும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினியே நட்டியைத் தொடர்பு கொண்டு நஷ்டத்தை சரி செய்வதாக உறுதியளித்துள்ளாராம்.

இந்த செய்திகள்தான் இப்போது கோலிவுட்டை பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதுதொடர்பாக ரஜினி தரப்பிலோ அல்லது ஐஸ்வர்யா தரப்பிலோ அல்லது நட்டி தரப்பிலோ யாரும் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுப்பு வெளியிடவும் இல்லை.

No comments: