ஃபிடல் காஸ்ட்ரோவின் சுயசரிதை

Time Guerilla’ என்ற பெயரில் ஃபிடல் காஸ்ட்ரோவின் சுயசரிதை வெளிவந்துள்ளது

டுத்து உறங்குவதற்கு முன்னால், மறக்காமல் தலையணைக்குக் கீழே கொஞ்சம் புல்லையும் அருகிலுள்ள  மேஜையில் கொஞ்சம் தண்ணீரையும் எடுத்து வைத்தான் காஸ்ட்ரோ. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 6ம் தேதி, கிறிஸ்துவைப் பார்த்து மரியாதை செலுத்த மூன்று ஞானிகள் வானத்தில் இருந்து வருவார்கள். வரும்போது கைநிறைய பரிசுப்பொருள்கள் கொண்டுவருவார்கள். இந்த ஞானிகளை ஓர் ஒட்டகம் சுமந்துவரும். களைத்து வரும் ஒட்டகத்தின் சோர்வைத் தீர்க்கத்தான் புல்லும் நீரும். ஆனால், மூன்று ஆண்டுகள் காத்திருந்த பிறகும் குறிப்பிடும்படியான பரிசு எதுவும் காஸ்ட்ரோவுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் இன்னொருமுறை முயன்று பார்ப்பதில் தவறில்லையே நம்பிக்கையுடன் உறங்கினான் காஸ்ட்ரோ.

மறுநாள் கண்விழித்தது அவசரமாகத் தேடியபோது, அட்டையால் செய்யப்பட்ட ஓர் ஊதுகுழல் மட்டுமே கிடைத்தது. ஏமாற்றமாகிவிட்டது காஸ்ட்ரோவுக்கு. ஏன், நான் விரும்பியது கிடைக்கவில்லை? என் மீது ஒட்டகம் கோபம் கொண்டுவிட்டதா? ஞானிகளும்கூடவா கோபித்துக்கொண்டு விட்டார்கள்? எதற்கும் உதவாத இந்த அட்டை பொம்மையை வைத்து என்னதான் செய்யமுடியும்? அல்லது இந்தக் கதைகளே பொய்யாக இருக்குமோ? வரவே போகாத ஒட்டகத்தையும் வானத்தில் இல்லாத ஞானிகளையும் நினைத்து இத்தனை நாள் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு விட்டேனா?

விடைகளைத் தேட ஆரம்பித்தபோது, ஃபிடல் காஸ்ட்ரோ முதலில் ஒரு நாத்திகவாதியாகவும் பின்னர் புரட்சியாளராகவும் முடிவில் கம்யூனிஸ்டாகவும் மாறிப்போனார். ‘நினைவு தப்பிக்கொண்டிருக்கிறது. அதனால், முடிந்தவரை எல்லா செய்திகளையும் பதிவு செய்துவிடலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் இந்தப் புத்தகம் உருவானது’ என்று சொல்லி புன்னகை செய்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.

பிப்ரவரி 3ம் தேதி காஸ்ட்ரோ, தன் சுயசரிதையை வெளியிடப்போகிறார் என்னும் செய்தி வெளியானதிலிருந்தே க்யூபர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிடைக்கப்போகும் அரிய தரிசனம் இது. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவரைப் பார்க்க முடிந்தது. அதுவும்கூட சில நிமிடங்கள்தான். அதுவும் திரையில்! மற்றபடி, பொது நிகழ்ச்சியில் நேரடியாகப் பார்த்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, ஹவானா கருத்தரங்க மையத்துக்கு உள்ளேயும் வெளியிலும் கூட்டம் கூட்டமாகத் திரண்டிருந்தார்கள். ஃபிடல், ஃபிடல்!

காஸ்ட்ரோ அரங்கில் கால் பதித்தபோது, ஒட்டுமொத்தக் கூட்டமும் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தது. பலரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர்களில் பலர், தங்கள் வாழ்நாளில் காஸ்ட்ரோவைத் தவிர இன்னொரு க்யூபத் தலைவரைக் கண்டதில்லை. நாற்பத்து எட்டு ஆண்டுகள் க்யூபாவை ஆட்சி செய்த ஃபிடல், அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஃபிடல், உதவியாளர் ஒருவரைப் பிடித்துக்கொண்டு நடந்து வந்தார். அடர்த்தியான வண்ணத்தில் டிராக் சூட். நீல நிறச் சட்டை.

ஆனால், பேசத் தொடங்கியதும் புன்சிரிப்பும் உற்சாகமும் அவரைப் பற்றிக்கொண்டது. ‘எனக்குப் பழைய கடிகாரங்கள், பழைய காலணிகள், பழைய மூக்குக் கண்ணாடிகள் ஆகியவை மிகவும் பிடிக்கும். ஆனால், அரசியலைப் பொறுத்தவரை எல்லாமே புதிதாக இருக்கவேண்டும்!’

‘Time Guerilla’ என்பது அவர் வெளியிட்ட ஸ்பானிஷ் நூலின் பெயர். குழந்தைப் பருவம் தொடங்கி, பதவியைக் கைப்பற்றிய டிசம்பர் 1958 வரையிலான விரிந்த காலகட்டம் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களில் இரு தொகுதிகளில் தொகுக்கப்பட்டிருக்கிறது. கடியுஸ்கா பிளாங்கோ என்னும் பத்திரிகையாளரிடம் காஸ்ட்ரோ மேற்கொண்ட உரையாடல்களில் இருந்து இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட ஒட்டகச் சம்பவம் மட்டுமல்ல,‘நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத பல செய்திகள் இந்த இரு நூல்களில் உள்ளன!’ என்றார் காஸ்ட்ரோ.

உடல் நலமின்மை காரணமாக 2006ம் ஆண்டு  தாற்காலிகமாக ஓய்வு பெற்றுக்கொண்ட காஸ்ட்ரோ, அடுத்த இரு ஆண்டுகளில் முற்றிலுமாக அரசியலில் இருந்து விலகிக்கொண்டார். சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் பொறுப்புகள் சென்றன. ‘இனி அரசியலில் தலையிடமாட்டேன்’ என்று அறிவித்தாலும் உள்ளூர் செய்திகள் தொடங்கி, அயல்நாட்டுச் செய்திகள் வரை பலவற்றைக் குறித்த தன் கருத்துகளை க்யூபாவின் அதிகாரபூர்வ ஏடான ‘கிரான்மா’வில் தொடர்ந்து எழுதி வந்தார்.

மேடையிலும், தொழில்நுட்ப வளர்ச்சி, சமகால அரசியல் நிகழ்வுகள், தன்னைச் சந்தித்த வெளிநாட்டுப் பிரமுகர்கள் என்று பல விஷயங்களை நினைவுகூர்ந்தார் காஸ்ட்ரோ.  ‘சோஷலிசத்தைக் கொண்டுவந்துவிட்டாலே பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நினைப்பது தவறு!’ என்றார்.

‘உங்களால் எப்படி இவ்வளவு உற்சாகமாக இருக்க முடிகிறது?’ என்று முன்பொருமுறை கேட்கப்பட்டபோது காஸ்ட்ரோ அளித்த விடை, ‘புத்தகங்கள்.’ காஸ்ட்ரோவின் வாசிப்பு வழக்கத்தை நேரில் கண்ட தோழர்களின் குறிப்புகள் ஆச்சரியமளிக்கக்கூடியவை.
பொறுப்பு வகித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் 5 அல்லது 6 புத்தகங்களை மாறி மாறி வாசிப்பது அவர் வழக்கம். திடீரென்று இந்த 6 புத்தகங்களையும் அப்படியே வைத்துவிட்டு வேறு ஒரு புதிய துறை சார்ந்த புத்தகத்துக்குத் தாவி, மீண்டும் பழைய புத்தகங்களை அடைவது வழக்கம்.

தினமும் தோழர்கள்தான் அவர் வாசிக்க வேண்டிய செய்தித்தாள்களை சேகரித்து அடுக்கிவைப்பது வழக்கம். சில செய்திகளை, இது இவருக்கு வேண்டாமே என்று நினைத்து விட்டுவிடுவார்கள். மிகச் சரியாக அதைத்தான் தேடிப்பிடித்து படித்துவிட்டு தோழர்களுடன் சண்டையிடுவார் காஸ்ட்ரோ. ‘இவருக்கு எது முக்கியம், எது முக்கியமல்ல என்று தீர்மானிப்பது மிக மிக சிரமமானது!’ என்று அவர்கள் சலித்துக்கொள்கிறார்கள். கோழி வளர்ப்பு பற்றிய நீண்ட புத்தகம் இவருக்கு நிச்சயம் தேவையிருக்காது என்றுதான் தோழர்கள் நினைப்பார்கள். ஆனால், எங்காவது ஓர் அறிக்கையில் கோழி வளர்ப்பு பற்றிய விவாதம் எழுப்படும்போது, அந்தப் புத்தகத்தை உடனடியாகக் கொண்டு வரச் சொல்லி கேட்பார்.

ஒருமுறை செய்தித்தாளில் வெப்பமண்டல விவசாயம் எனும் பதத்தைப் பார்த்திருக்கிறார். இதென்ன புதிதாக இருக்கிறதே என்று அது பற்றிய செய்திக் கட்டுரை ஒன்றை படித்திருக்கிறார். அதில் கொடுக்கப்பட்ட விவரங்கள் போதாமல் போகவே, ஒரு சிறிய புத்தகம். பிறகு மற்றொரு புத்தகம். இப்படி சிறிது சிறிதாக முன்னேறி 100 புத்தகங்களை வாசித்துவிட்டு ‘ஓ இதுதானா வெப்பமண்டல விவசாயம்!’ என்று ஆச்சரியப்பட்டுவிட்டு அந்தத் துறையைவிட்டு வெளியே வந்திருக்கிறார்.

இப்போது காஸ்ட்ரோவுக்கு 85 வயதாகிறது. தன்னுடைய வாசிப்பு வழக்கத்தை அவர் அதிகம் மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை. ட்விட்டரில் சமீபத்தில் வந்த தன் மரண அறிவிப்புச் செய்தியை வாசித்ததாகவும் ரசித்ததாகவும் சொன்னார். தன் உரையை காஸ்ட்ரோ இப்படி முடித்துக்கொண்டார்: ‘நம்முடைய நாட்டுக்காக, நம்முடைய கிரகத்துக்காக, மனித இனத்துக்காக நாம் கடைசி வினாடிவரை போராட வேண்டியது நமது கடமையாகும்.’ காஸ்ட்ரோ இந்த நிமிடம் வரை உயிர்த்திருப்பதற்குக் காரணம், இந்தப் போராட்ட உணர்வுதான்.

No comments: