அப்புக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினேன் -சுசீந்திரன்

நான் இயக்கிய அழகர்சாமியின் குதிரைக்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு மட்டுமாவது அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் படத்துக்கும் அவனுக்கும் சேர்த்தே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

அகில இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் விருதினைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அழகர்சாமியின் குதிரை படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், அழகர்சாமி குதிரை'க்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்புக்குட்டி தாய் தந்தையை இழந்தவன். சினிமா ஆர்வம் ஒன்றையே மூலதனமாக கொண்டு வந்தவன்.

அவனை அழகர்சாமி குதிரை படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்த போது இவனை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கிறீர்கள் என்று நிறையபேர் கேட்டார்கள். படம் பார்த்த பிறகு அப்புக்குட்டி பிரமாதமாக நடித்து இருப்பதாக பாராட்டினார்கள். இப்போது அவனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்து இருப்பது எனக்கு சந்தோஷம்," என்றார்.

அப்புக்குட்டி

அழகர்சாமி குதிரை படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகர் அப்புக்குட்டி சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக என்னை தேர்வு செய்த போது டைரக்டர் சுசீந்திரன் குதிரையுடன் என்னை பழக சொன்னார். நானும் குதிரையுடன் பழகினேன். டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் படத்தில் செய்து இருந்தேன். எனவே இந்த விருதுக்குரிய பெருமை அனைத்தும் டைரக்டர் சுசீந்திரனுக்கே சேரும்.

நான் கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமாவில் ஒரு வாழ்க்கை கிடைப்பதற்காக போராடியவன். சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றார்.

அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் 'மன்னாரு.' இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறினார் அப்புக்குட்டி. உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.

Post a Comment

0 Comments