வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

இந்திய திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான 59வது தேசிய விருதுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருதும், ஆரண்யகாண்டம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கும் கிடைத்திருக்கிறது. மேலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வந்த தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கி‌டைத்திருக்கிறது.


சிறந்த பிராந்திய மொழிப்படம் - வாகை சூட வா (தமிழ்)

சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (தமிழ் - அழகர்சாமியின் குதிரை)

சிறந்த பொழுது‌போக்கு திரைப்படம் - அழகர்சாமியின் குதிரை (தமிழ்)

சிறந்த படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன் (தமிழ் - ஆரண்யகாண்டம்)

அறிமுக இயக்குநருக்கான விருது - தியாகராஜா குமாரராஜா (தமிழ் - ஆரண்யகாண்டம்) 

சிறந்த நடிகர் - கிரீஸ் குல்கர்னி (தியோல் - மராத்தி படம்)

சிறந்த நடிகை - வித்யாபாலன் (தி டர்ட்டி பிக்சர்ஸ்)

சிறந்த படம் - ஐ யாம்

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ரா ஒன்

சிறந்த குழந்தைகளுக்கான படம் - சில்லார் பார்ட்டி


வாகை சூட வா படத்திற்கு விருது கிடைத்திருப்பது குறித்து டைரக்டர் சற்குணம் தினமலருக்கு அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சந்தோஷமான மனநிலையில் இருக்கிறேன். எந்த ஒரு சின்ன விஷயத்திலும் காம்பரமைஸ் பண்ணாம, நேர்மையா எங்களுக்கு கிடைச்ச விருதா இதை நினைக்கிறேன். எந்த ஒரு முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்தால் தான், அதில் ஆர்வம் வரும், மேற்கொண்டு அடுத்த செயலில் ஈடுபட முடியும். தேசிய அளவில் பிரதிபலிக்கின்ற தேசிய விருது, நான் எடுத்த முயற்சிக்கு கிடைச்ச வெற்றியாய் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை இனியா அளித்துள்ள பேட்டியில், இனியா என்ற பெயரை தமிழ் சினிமாவிற்கு தெரியவச்ச சற்குணத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன். முதல் படத்திலேயே ஒரு காவிய படமாக, மேக்கப் இல்லாம, நடிகைக்கான எந்த வசதியும் இல்லாம 65 நாள், மதுரை பக்கத்தில் இருக்கிற அருப்புக்கோட்டையில் மார்ச்-ஏப்ரல் கடும் வெயிலில், காலில் செருப்பு கூட இல்லாம, முள் குத்தி, பலமுறை அடிபட்டு இந்தபடத்தில் நடித்தேன். இந்த படத்திற்காக நான் பட்ட கஷ்டம் எல்லாத்தையும், இந்த தேசிய விருது போக்கிடுச்சு. தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களில் நடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

அழகர்சாமியின் குதிரை படத்திற்கு விருது கிடைத்திருப்பது பற்றி டைரக்டர் சுசீந்திரம் அளித்துள்ள பேட்டியில், அப்புக்குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அழகர்சாமியன் குதிரை படத்தில் அப்புக்குட்டியை நடிக்க வைக்கும்போதும் பலரும் ஏளனம் செய்தார்கள். ஆனால் அதுவே இப்போது அப்புக்குட்டிக்கு விருது கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது நான் எடுத்த சாய்ஸ்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு ஒரு உண்மையா, டீமா ஒர்க் பண்ணினோம். இதுஒட்டு மொத்த டீமுக்கு கிடைச்ச வெற்றி என்று கூறியிருக்கிறார்.

தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் ரேகா என்பவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் அழகர்சாமியின் குதிரை மற்றும் வாகை சூட வா படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்தவர். இவர் இதுவரைக்கும் 58 படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்துள்ளார். நான் சப்-டைட்டில் கொடுத்த இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ரேகா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments