ஃபேஸ்புக்கில் கார் ஷோரூம்

அலுவலகமோ, வீடோ தற்போது சமூக வலைதளங்களில் நேரத்தை போக்குவதுதான் மக்களின் அன்றாட பொழுதுபோக்காகிவிட்டது. பொழுதுபோக்கு மட்டுமின்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலக நடப்புகளை நொடிக்கு நொடி தங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதும், நண்பர்களை உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் அருஞ்சாதனமாக இருப்பதும் சமூக வலைதளங்கள் மக்களை கட்டிபோட வைத்துள்ளதற்கு முக்கிய காரணம்.

பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், தற்போது சமூக வலைதளங்கள் முக்கிய வியாபார தலமாகிவிட்டன. குறிப்பாக, நம்பர் ஒன் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் சிறு முதலீட்டில் துவங்கப்படும் பெட்டிக் கடை முதல் பல ஆயிரம் கோடி முதலீடு கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களை கவர தங்களது முக்கிய வியாபார மையமாக மாற்றிக்கொண்டு விட்டன.

அந்த வகையில், கார் நிறுவனங்களும் தற்போது சமூக வலைதளங்களை வாடிக்கையாளர்களை கவரும் முக்கிய வர்த்தக மையமாக குறி வைத்துள்ளன. குறிப்பாக, ஃபேஸ்புக் மூலமாக அனைத்து கார் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் மார்க்கெட்டிங் மந்திரங்களை அரங்கேற்றி வருகின்றன.

ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில் தங்களது நிறுவன நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிவிப்பதுடன், விபரங்களையும் வழங்குகின்றன. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஃபேன் பக்கத்தில் விளம்பரங்களையும் செய்து வருகின்றன.

இதுதவிர, கார் நிறுவனத்திற்கு தவிர ஒவ்வொரு கார் மாடலுக்கும் தனித்தனியாக ஃபேஸ்புக்கில் தனி ஃபேன் பக்கத்தை வைத்திருக்கின்றன. அதில், லைக் செய்தால் போதும், அந்த கார் மாடல் பற்றிய அனைத்து தகவல்களையும் அப்டு டேட்டாக பெற முடியும்.

ட்வீட்டரிலும் இதுபோன்ற மார்க்கெட்டிங் நடந்து வந்தாலும், ஃபேஸ்புக்கில்தான் இது அதிகம் நடக்கிறது. மேலும், ஒவ்வொரு கார் மாடல்களும், நிறுவனங்களும் எவ்வளவு 'லைக்'குகளை பெறுகின்றன என்பதில் பெரும் போட்டியே நிலவுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் தனது ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில் அனைத்து கார் மாடல்களின் வெப் காஸ்ட்டுகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதுபோன்று, வாடிக்கையாளர்களை வித்தியாசமாக கவர்வதற்காகவே சோஷியல் மீடியா வல்லுனர்களை பணிக்கு அமர்த்தியுள்ளன கார் நிறுவனங்கள்.

முன்பு ஷோரூமுக்கு சென்று கார் குறித்த விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். ஆனால், தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் கார் நிறுவனங்களின் இணையதளங்களில் தயாரிப்புகள் பற்றிய விபரங்கள் புட்டு புட்டு வைத்து விளக்குவதால், கார்கள் பற்றிய விபரங்களை இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், கார் வாங்குபவர்கள் விபரங்களை பெறுவதற்கு ஷோரூமுக்கு சென்று நேரத்தை விரயமாக்குவது தவிர்க்க முடிகிறது. இதை பயன்படுத்தி தற்போது ஃபேஸ்புக்கையை தங்களது கார் ஷோரூமாக மாற்றி வருகின்றன கார் நிறுவனங்கள்.

No comments: