இந்தியாவின் தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.76,933

 உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று எனப் பெயரைப் பெற்றிருந்தாலும், இந்தியாவின் தனி நபர் வருவானம் இன்னும் சிலாகிக்கும் அளவுக்கு பெரிதாக உயரவில்லை.

இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ 76933 (1527 டாலர்) மட்டுமே.

இந்தியாவின் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகை சற்று உயர்ந்தது என்றாலும், நடப்பு விலைவாசியோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகும்.

ஜி 20 அமைப்பில் உள்ள நாடுகளில் மிகக் குறைந்த தனி நபர் வருவாய் கொண்ட நாடு என்ற 'அந்தஸ்து' இந்தியாவுக்கு மட்டும்தான். உலகின் பெரிய பொருளாதார நாடு என்ற பெயர் இருந்தும், தனிநபர் வாழ்க்கைத் தரம் உயரவே இல்லையே என்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் தனி நபர் வருவாயில் 117வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது 94வது இடத்தைப் பெற்றுள்ளது.

1990-ல் சீனா 127வது இடத்திலிருந்தது. இப்போது அந்நாடு 74 வது இடத்தைப் பெற்றுள்ளது.

அதே நேரம், நாட்டின் மொத்த உற்பத்தி - ஜிடிபி- என்று பார்த்தால், உலகின் மற்ற நாடுகளைவிட நல்ல வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. 1980 முதல் 2010 வரை உலக ஜிடிபி 3.3 சதவீதம் அதிகரித்ததென்றால், இந்தியாவின் ஜிடிபி 6.2 சதவீத உயர்வு கண்டுள்ளது. உலக உற்பத்தி வீதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி.

கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இந்தியாவை வெகுவாக பாதித்துள்ளதாகவும் இந்த பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

No comments: