யுவராஜ் சிங்குக்கு கேன்சர் உறுதி


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக அவர் அமெரிக்காவில் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் உலக கோப்பை தொடருக்கு பிறகு உடல் நலக்குறைவால் சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்தார். உலக கோப்பை தொடரில் அபாரமாக ஆடி தொடர் நாயகன் விருது வென்ற இவர், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த அக்டோபரில் செய்திகள் வெளியாயின. 

இதனை யுவராஜ் சிங்கும், அவரது தாயாரும் மறுத்தனர். ‘நுரையீரலில் சிறிய கட்டி ஏற்பட்டுள்ளது. மருந்திலேயே அதனை குணப்படுத்திவிடலாம்‘ என்றனர். 
இந்நிலையில், யுவராஜுக்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதற்காக அவர் கடந்த மாதம் 26ம் தேதி முதல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பிரபல கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவரது பிசியோதெரபிஸ்ட் ஜடின் சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது: யுவராஜுக்கு ஏற்பட்டிருப்பது, அரிதான கேன்சர் கட்டி. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் குணப்படுத்திவிட முடியும். கடந்த 26ம் தேதி முதல் யுவராஜுக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரத்தத்தில் உள்ள கேன்சர் கிருமிகளை விரைவில் அழித்து விடலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

இது 100 சதவீதம் குணப்படுத்தக் கூடிய கேன்சர்தான். அதனால் யுவராஜுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சிகிச்சை முடிந்து, வரும் மே மாதம் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்து விடுவார். இவ்வாறு ஜடின் சவுத்திரி கூறியுள்ளார். இதற்கிடையே, யுவராஜ் விரைவில் குணமடைந்து மீண்டும் விளையாட வரவேண்டுமென அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘யுவராஜுக்கு கேன்சர் உறுதியாகியிருப்பதை கேள்விப்பட்டு வருந்துகிறேன். ஆனாலும் அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார். டென்னிஸ் வீரர் போபண்ணா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறுகையில், ‘யுவராஜ் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம்’ என்றனர்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் நண்பரே !