தொழில்நுட்ப பார்ட்னராக்கிய ஹீரோ மோட்டோ கார்ப்

ஹோண்டா பிரிந்து சென்றதையடுத்து, தொழில்நுட்பத்துக்காக தவித்து வந்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தற்போது புதிய துணையை தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தை தனது புதிய தொழில்நுட்ப பார்ட்னராக அந்த நிறுவனம் தெரிவு செய்துள்ளது.

இந்தியாவின் பைக் உற்பத்தியில் கோலோய்ச்சி வரும் ஹீரோ ஹோண்டா நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஹோண்டா விலகியது. இதையடுத்து, ஹீரோ நிறுவனம் தனித்து களமிறங்கியது.

இருப்பினும், ஹீரோவுக்கு வரும் 2014ம் ஆண்டு வரை தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஹோண்டா உத்தரவாதம் கொடுத்தது. இதற்காக, கணிசமான தொகையை ஹோண்டாவுக்கு ஹீரோ ராயல்டியாக தந்து வருகிறது.

இந்த நிலையில், புதிய தொழில்நுட்ப பார்ட்னரை தேர்ந்தெடுக்கும் பணிகளை ஹீரோ தீவிரப்படுத்தியது. சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தை வழங்கும் பார்ட்னரை தேர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.

இதற்கு தற்போது பலன் கிட்டியுள்ளது. பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தை தனது புதிய தொழில்நுட்ப பார்ட்னராக ஹீரோ மோட்டோ கார்ப் தேர்வு செய்துள்ளது.

எதிர்காலத்தில் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பைக்குகள் தயாரிப்பதற்கான வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளை எரிக் புயெல் ரேஸிங் வழங்கும்.

ஹோண்டா தற்போது அளித்து வரும் தொழில்நுட்பத்திற்காக கணிசமான அளவு ராயல்டியை ஹீரோ வழங்கி வருகிறது. இதை வெகுவாக குறைக்கும் வகையில் புதிய பார்ட்னரை ஹீரோ தேடிப்பிடித்துள்ளது.

No comments: