இலங்கை அணியிடம் தோல்வி

by 8:08 AM 0 comments

 முத்தரப்பு லீக் போட்டியில் மீண்டும் சொதப்பலாக ஆடிய இந்திய அணி, இலங்கையிடம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. அடுத்த இரு போட்டிகளில் கட்டாயம் வென்றால் தான், பைனல் வாய்ப்பை பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது.
முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. நேற்று பிரிஸ்பேனில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. தடை விதிக்கப்பட்ட தோனிக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை சேவக் ஏற்றார். ஜாகிர் கான், ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அஷ்வின், பார்த்திவ் படேல் வாய்ப்பு பெற்றனர். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்தனா, "பேட்டிங் தேர்வு செய்தார்.
வலுவான துவக்கம்:
இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா, தில்ஷன் சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். உமேஷ் யாதவ் ஓவரில் தில்ஷன் அடுத்தடுத்து ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து மிரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்த நிலையில், இர்பான் பதான் பந்தில் சேவக்கின் அசத்தல் "கேட்ச்சில் ஜெயவர்தனா(45) அவுட்டானார். அசைதம் கடந்த தில்ஷன்(51), அஷ்வின் சுழலில் சிக்கினார். உமேஷ் யாதவ் வேகத்தில் சங்ககரா(8) வீழ்ந்தார்.
இதற்கு பின் சண்டிமால், திரிமான்னே இணைந்து பொறுப்பாக ஆடினர். இவர்கள், இந்திய பந்துவீச்சை மிக எளிதாக சமாளித்தனர். பதான் பந்தில் சண்டிமால்(38) போல்டானார்.
10 ஓவரில் 91 ரன்:கடைசி கட்டத்தில் ஏஞ்சலோ மாத்யூஸ், திரிமான்னே அதிரடியாக ரன் சேர்த்தனர். அபாரமாக பேட் செய்த திரிமான்னே(62), அஷ்வின் வலையில் வீழ்ந்தார். பெரேரா(10) சோபிக்கவில்லை. ரெய்னா பந்தை சிக்சருக்கு அனுப்பிய மாத்யூஸ் அணியின் ஸ்கோரை மிக விரைவாக உயர்த்தினார். கடைசி 10 ஓவரில் இந்தியா 91 ரன்களை வாரி வழங்க, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ்(49), மகரூப்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் இர்பான் பதான், அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் ஏமாற்றம்:
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு இரண்டாவது பந்திலேயே "ஷாக் கொடுத்தார் மலிங்கா. இவர் மணிக்கு 142.5 கி.மீ., வேகத்தில் வீசிய பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்த சேவக் "டக் அவுட்டானார். 100வது சத நெருக்கடியில் தவிக்கும் சச்சின்(22), குலசேகரா பந்தில் போல்டானார். தொடர்ந்து மிரட்டிய குலசேகரா, காம்பிரையும்(29) வெளியேற்றினார். மீண்டும் ஒரு முறை "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

பின் ரெய்னா, விராத் கோஹ்லி இணைந்து போராடினர். இவர்கள் கொடுத்த சுலப "கேட்ச் வாய்ப்புகளை இலங்கை வீரர்கள் கோட்டை விட, பல முறை கண்டம் தப்பினர். நான்காவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து நம்பிக்கை தந்தனர். இந்த நேரத்தில் மகரூப் பந்தில் ரெய்னா(32) அவுட்டானார். பெரேரா ஓவரில் முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்த விராத் கோஹ்லி, அடுத்த பந்திலும் பவுண்டரி அடிக்க பேராசைப்பட்டார். ஆனால், பந்து குலசேகரா கையில் தஞ்சம் அடைய, 66 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய நம்பிக்கை தகர்ந்தது. ரவிந்திர ஜடேஜா(17), பார்த்திவ் படேல்(4), அஷ்வின்(5), வினய் குமார்(0) தாக்குப்பிடிக்கவில்லை.
இர்பான் ஆறுதல்:
இந்திய அணி 232 ரன்கள் எடுத்தால் இலங்கைக்கு போனசாக ஒரு புள்ளி கிடைக்காது. இதனை உணர்ந்த இர்பான் பதான் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார். குலசேகரா பந்தில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்த, இவர் போனஸ் புள்ளியை தடுக்க மட்டுமே உதவினார். பெரேரா பந்தில் பதான்(47) வீழ்ந்தார். இந்திய அணி 45.1 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 

இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இந்தியா (10) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. அடுத்து வரும் இரு போட்டிகளில் வென்றால் தான் பைனலை பற்றி நினைக்க முடியும்.
இலங்கை சார்பில் 3 விக்கெட் வீழ்த்திய குலசேகரா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

 வாய்ப்பு எப்படி?
இந்திய அணி பைனலுக்கு முன்னேறுவதில் பெரும் சிக்கல் உள்ளது. இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இன்னும் 3 லீக் போட்டிகள் இருப்பதால் பிரச்னை இல்லை. ஆனால், இந்திய அணிக்கு 2 போட்டிகள்( பிப்., 26.,- ஆஸி., பிப்., 28- இலங்கை) தான் உள்ளன. இந்த இரண்டிலும் போனஸ் புள்ளியுடன் வெல்ல வேண்டும். பின், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து இந்திய அணியின் பைனல் வாய்ப்பு அமையும்.


தோனி பெருந்தன்மைதடை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத தோனி, மைதானத்தில் களமிறங்கி அதிர்ச்சி அளித்தார். இம்முறை வீரர்களுக்கு தண்ணீர் எடுத்து வரும் பணியை கச்சிதமாக செய்தார். அப்போது ரெய்னா, கோஹ்லிக்கு "அட்வைஸ் வழங்கினார்.
----------
"ரன் அவுட்டை வீணாக்கிய சேவக்நேற்று 40வது ஓவரை அஷ்வின் வீசினார். இரண்டாவது பந்தை வீசுவதற்கு முன் இலங்கை வீரர் திரிமான்னே "கிரீசுக்கு வெளியே நிற்பதை பார்த்தார். உடனே, "பெயில்சை தகர்த்து "ரன் அவுட் கோரினார். அம்பயர் பால் ரீபல், கேப்டன் சேவக்கிடம் விவாதித்தார். இந்த நேரத்தில் சச்சின் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தலையிட்டு "அப்பீலை வாபஸ் பெறும்படி கூறியுள்ளனர். இதனை சேவக் ஏற்க, கண்டம் தப்பினார் திரிமான்னே. அப்போது 44 ரன்களில் இருந்த இவர், இறுதியில் 62 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு தொல்லை கொடுத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்டில், இயான் பெல்லுக்கு ரன் அவுட் கொடுத்ததை இந்திய அணியினர் வாபஸ் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விதமுறைப்படி "அவுட் என்ற நிலையில் விளையாட்டு உணர்வை காட்டி தோல்வி அடைய வேண்டியது அவசியம் தானா என்பதை இந்திய வீரர்கள் யோசிக்க வேண்டும். 

இது குறித்து சேவக் கூறுகையில்,""அஷ்வின் "அப்பீல் செய்த போது, அம்பயர் பால் ரீபல் முடிவு எடுக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார். "அவுட் கேட்டால் தருவதாக கூறினார். நான் அப்பீல் கேட்டு அவரும் " அவுட் கொடுத்தால், விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்ளவில்லை என்று விமர்சிப்பர். இதன் காரணமாகவே திரிமான்னேவுக்கு இன்னொரு எச்சரிக்கை கொடுப்பது என்று முடிவு செய்தோம். அவுட்டையும் வாபஸ் பெற்றோம்,என்றார்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: