தோனிக்கு மீண்டும் தடை!

இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை மீண்டும் ஒருமுறை வீழ்த்த முடியவில்லை. நேற்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தயாசத்தில் படுதோல்வி அடைந்தது. பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியா சொதப்பியது. புயல்வேகத்தில் பந்துவீசிய ஹில்பெனாஸ், பிரட் லீ, ஆஸ்திரேலிய அணிக்கு கைகொடுத்தனர். 
ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, ஜாகிர் கான் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நான்கு வேகங்களுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் மெக்கேவிற்கு பதிலாக பென் ஹில்பெனாஸ் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், மாத்யூ வேட் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். ஜாகிர் ஓவரில் வார்னர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்த நேரத்தில் இர்பான் பதான், வார்னரை(43) வெளியேற்ற, நிம்மதி பிறந்தது. பாண்டிங்(7) மீண்டும் ஏமாற்றினார். வேட், பாரஸ்ட் மிகவும் மந்தமாக ஆட, 25வது ஓவரில் தான் ஆஸ்திரேலியாவால் 100 ரன்களை எட்ட முடிந்தது. வேட் 45 ரன்களில் வெளியேறினார்.
கிறிஸ்டியன் அதிரடி:
 பின் மைக்கேல் ஹசி, பாரஸ்ட் சேர்ந்து ரன் விகிதத்தை உயர்த்தினர். உமேஷ் யாதவ், ரெய்னா ஓவரில் பவுண்டரிகளாக விளாசிய மைக்கேல் ஹசி(59), பதான் பந்தில் வீழ்ந்தார். இதே ஓவரில் பாரஸ்டும்(52) அவுட்டானார். கடைசி கட்டத்தில் டேவிட் ஹசி, கிறிஸ்டியன் அதிரடியாக ரன் சேர்த்து, போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினர். இவர்கள், வினய் குமாரை ஒருகை பார்த்தனர். இவரது பந்தை சிக்சருக்கு அனுப்பினார் டேவிட் ஹசி. தொடர்ந்து வினய் குமார் வீசிய போட்டியின் 49வது ஓவரில் கிறிஸ்டியன் வரிசையாக நான்கு பவுண்டரிகள் விளாச, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் எகிறியது. கடைசி 10 ஓவரில் மட்டும் 101 ரன்கள் எடுக்கப்பட, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹசி(26), கிறிஸ்டியன்(30) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் இர்பான் பதான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
விக்கெட் மடமட:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி, ஹில்பெனாஸ், பிரட் லீ "வேகத்தில்' சிதறியது. "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என விளையாடினர். பிரட் லீயிடம் முதலில் காம்பிர்(5) காலியானார். ஹில்பெனாஸ் மணிக்கு 145.6 கி.மீ., வேகத்தில் வீசிய பந்தில் சச்சின்(3) நடையை கட்டினார். பிரட் லீயின் அடுத்த ஓவரில் ரோகித் "டக்' அவுட்டானார். ஹில்பெனாஸ் வீசிய பந்தை விராத் கோஹ்லி அடிக்க, "ஸ்லிப்' திசையில் நின்ற டேவிட் ஹசி மிகவும் தாழ்வாக பிடித்தார். இது குறித்து சந்தேகம் வர, மூன்றாவது அம்பயரிடம் கேட்கப்பட்டது. முடிவில் "கேட்ச்' உறுதி செய்யப்பட, கோஹ்லி(12), வெளியேறினார். அப்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
தோனி அரைசதம்:
பின் கேப்டன் தோனி, ரெய்னா இணைந்து சிறிது நேரம் போராடினர். கிறிஸ்டியன் "ஆப் ஸ்டம்புக்கு' வெளியே வீசிய பந்தை வீணாக அடித்த ரெய்னா(28) அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா(18) கைவிட்டார். தன்னுடன் வார்த்தை போரில் ஈடுபட்ட பிரட் லீ ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து, பதிலடி கொடுத்தார் தோனி. இவர் 56 ரன்களுக்கு ஹில்பெனாஸ் பந்தில் வீழ்ந்தார். இர்பான்(19), ஜாகிர்(9) தாக்குப்பிடிக்க தவற, இந்திய அணி 43.3 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது. 
ஆஸ்திரேலியா சார்பில் ஹில்பெனாஸ் 5, பிரட் லீ 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதால், ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கான நான்கு புள்ளிகளுடன் சேர்த்து, கூடுதலாக ஒரு புள்ளியை "போனசாக' பெற்றது.
 ஆட்ட நாயகன் விருதை ஹில்பெனாஸ் தட்டிச் சென்றார்.

Post a Comment

0 Comments