ஜெ.வின் தொடர்பு எல்லையிலிருந்து விரட்டப்பட்ட நடராஜன்

 மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து, தனது மனைவி சசிகலாவை, அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரலேகா மூலமாக ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்து, போயஸ் தோட்டத்திற்குள் புகுந்து ஆட்டிப்படைத்து வந்த நடராஜன் இன்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் நிலைக்குப் போய் விட்டார்.

ஜெயலலிதா என்று சொல்லும் போது கூடவே சசிகலா, நடராஜன் ஆகியோரது பெயர்களும் மறக்காமல் வரும். அந்தஅளவுக்கு ஜெயலலிதாவுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தவர்கள் சசிகலாவும், அவரது கணவர் நடராஜனும். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் நடராஜனும், சசிகலாவும்தான் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நட்பு வட்டமாக இருந்தனர்.படிப்படியாக இருவரும் ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும், யார் சந்திக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் அளவுக்கு உயர்ந்தனர்.

நடராஜன் தமிழக அரசில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர். எம்.ஜி.ஆரின் கடைசிக்காலத்தில் அதிமுகவில் முக்கிய பங்கும் வகித்தவர். 1977 முதல் 87 வரை அதிமுகவின் பிரசார அணியில் இடம் பெற்றிருந்தார். அந்த வகையில்தான் ஜெயலலிதாவுக்கும் அறிமுகமானார்.

அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரலேகா மூலம் சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தி போயஸ் தோட்டத்திற்குள் புகுந்தார். நாளடைவில் ஜெயலலிதாவை ஆட்டிப்படைக்கவும் ஆரம்பித்தார். சசிகலா, நடராஜனைத் தொடர்ந்து சசி குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவராக தோட்டத்திற்குள் நுழையும் நிலையும் ஏற்பட்டது.

ஆனால் நடராஜனின் போக்கால் கோபமடைந்த, அதிருப்தி அடைந்த ஜெயலலிதா, 1996 சட்டசபைத் தேர்தலில் சந்தித்த மிகப் பெரிய படுதோல்விக்குப் பின்னர் நடராஜனை போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். அவரை சசிகலா சந்திக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

அன்று வெளியேற்றப்பட்ட நடராஜன் அதன் பின்னர் போயஸ் தோட்டத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் சமீப ஆண்டுகளில் மறைமுகமாக அதிமுகவுடன் நெருங்கிய தொடர்பில்தான் இருந்து வந்தார் நடராஜன். குறிப்பாக நடிகர் கார்த்திக்கை அதிமுக கூட்டணிக்கு வரவழைத்தது உள்ளிட்ட பல காரியங்களை அவர்தான் செய்து வந்ததாக தெரிகிறது. கூட்டி வந்த கார்த்திக்கை, கூட்டணி குறித்து எதுவுமே பேசாமல், கார்த்திக்கை வெறுப்படித்து, அவராகவே வெளியேறிப் போக வைத்தார் ஜெயலலிதா என்பது தனிக் கதை.

ஜெயலலிதாவுக்காக தனது கணவரை விட்டுப் பல காலம் பிரிந்திருந்தார் சசிகலா, அவரைப் பார்க்கக் கூட போகாமல் இருந்து வந்தார். இருப்பினும் சமீப காலமாக இவரும் கூட நடராஜனுடன் தொடர்பில் இருந்து வந்தார் என்று கூறப்படுகிறது.

எம்.என். என்று அதிமுகவினரால் அழைக்கப்பட்டவர் நடராஜன். எமன் என்று நடராஜன் எதிர்ப்புக் கோஷ்டியினரால் பீதியுடனும் அழைக்கப்பட்டார். அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக தலையெடுத்து தலைவிரித்தாடி வந்த நடராஜனுக்குப் பல முகங்கள். பத்திரிக்கையாளராக செயல்பட்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு திட்டம் வகுத்துக் கொடுப்பவராக இருந்து வந்தார். தமிழ் ஆர்வலராக தன்னைக் காட்டிக் கொண்டார். சசிகலாவை பயன்படுத்தி ஆட்சியில் பல காரியங்களையும் ரகசியமாக சாதித்து வந்தார்.

மன்னார்குடி குடும்பத்தின் மகாராஜாவாக, போயஸ் கார்டனுக்குள் புகுந்திருந்த சசிகலா, ராவணன், திவாகரன், தினகரன், வெங்கடேஷ் என அத்தனை பேரையும் பயன்படுத்தி பல காரியங்களை சத்தம் போடாமல் செய்து வந்தது நடராஜன்தான் என்பது அதிமுகவினரின் கருத்து. ராவணன், திவாகரன் உள்ளிட்ட சசி குடும்பத்தினர் அத்தனை பேருமே நடராஜன் அட்வைஸ்படிதான் நடந்து வந்ததாகவும் ஒரு பேச்சு உள்ளது.

சாதாரண மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து பின்னர் ஜெயலலிதாவின் நட்புக்குப் பாத்திரமாகி, அது பின்னர் பிளவுபட்டாலும் கூட தனது ஆதிக்கத்தை சற்றும் தளர விடாமல் நிலை நாட்டி வந்த நடராஜன், தற்போது ஜெயலலிதாவின் தொடர்பு எல்லைக்கு அப்பால் விரட்டப்பட்டு கம்பி எண்ணும் நிலைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

ராவணன் கைது செய்யப்பட்டபோதே அடுத்து நடராஜன் அல்லது தினகரன்தான் கைதாவார்கள் என்று பேச்சு கிளம்பியது. இந்த நிலையில் தற்போது நடராஜனைத் தூக்கி விட்டனர். அடுத்து தினகரனா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

No comments: