உலகிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கிறவங்க இந்தியர்கள்தான்!

கோடி கோடியாய் பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்கமுடியாது. ஏனெனில் மகிழ்ச்சி என்பது மனதோடு தொடர்புடையது. பணக்கார நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியில் ஏழைகளாவே உள்ளனர். ஆனால் உலகிலேயே அதிகம் மகிழ்ச்சியுடன் இருக்கும் மக்களின் பட்டியலில் இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

உலக மக்களின் மகிழ்ச்சி பற்றி, இப்சஸ் குளோபல் நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. 24 நாடுகளில் 18,000 பேரிடம் மகிழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டு அதனை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சர்வதேச அளவில் மகிழ்ச்சியானவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிகரித்துள்ளது. அதாவது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 4ல் 3 பேர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 4ல் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மகிழ்ச்சியில் பணக்காரர்கள்

பொருளாதார நெருக்கடி, போர், இயற்கை பேரிடர் என பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவில் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளவர்களில் இந்தியர்கள், இந்தோனேசியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டினர் முக்கிய இடம் பிடித்துள்ளனர். ஹங்கேரி, தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களில் மிகவும் குறைவானவர்களே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மண்டலவாரியாக பார்த்தால் லத்தீன் அமெரிக்காவில் அதிகம் பேர் மகிழ்ச்சியாக உள்ளனர். வட அமெரிக்கா, ஆசியா-பசிபிக், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்கள் பிடித்தன.

பொருளாதார ரீதியாக வசதியாக இருப்பவர்களிடம் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும் என்று கூற முடியாது. ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணத்தைத் தாண்டி பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாசாரம் உள்ள மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று இப்சஸ் குளோபல் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜான் ரைட் கூறியுள்ளார்.

No comments: