ஷங்கர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்


ஷங்கர் இயக்கிய “நண்பன்” படம் நேற்று முன்தினம் ரிலீசானது. இப்படத்தில் மோசடி கேரக்டரில் நடித்த எஸ்.ஜே. சூர்யா பெயர் பஞ்சமன் பாரிவேந்தன். அவர் பெயரில் விஜய் கல்லூரியில் படித்து ஆள் மாறாட்டம் செய்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
 
இந்திய ஜனநாயக கட்சி தலைவரான பாரிவேந்தரை களங்கப்படுத்தும் நோக்கில் அவரது பெயரை எஸ்.ஜே. சூர்யா கேரக்டருக்கு சூட்டியிருப்பதாக அக்கட்சி கண்டித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் பி. ஜெயசீலன், சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
 
எங்கள் கட்சி தலைவர் பாரிவேந்தர் பல லட்சம் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் மூலமாக கல்வி சேவையும் செய்கிறார். ஷங்கர் இயக்கிய “நண்பன்” படத்தில் பாரிவேந்தரை அவதூறு செய்துள்ளார். அந்த படத்தில் ஒரு மோசடி கதாபாத்திரத்துக்கு பாரிவேந்தன் பெயர் சூட்டியுள்ளார்.
 
இன்னொரு பெண் கதாபாத்திரம் மது போதையில் பாரிவேந்தராவது பூரிவேந்தராவது என்று பேசுவது போன்றும் இன்னொரு இடத்தில் பாரி, பூரி, கக்கூஸ் லாரி என்ற வசனத்தை பயன்படுத்தியும் பாரிவேந்தரை களங்கப்படுத்தி உள்ளார். ஏற்கனவே தனது “சிவாஜி” படத்திலும் வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை பெயர்களில் கதாபாத்திரங்கள் உருவாக்கி தமிழ் பெண்கள் கருப்பானவர்கள் என சித்தரித்தார்.
 
“எந்திரன்” படத்தில் ஒரு குடிகாரனுக்கு பாரிவேந்தர் என பெயர் சூட்டி அவர் பெண்களிடம் தகாத முறையில் நடப்பதுபோல் காட்சி அமைத்தார். எனவே ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவதூறான வார்த்தைகளை நீக்கவேண்டும்.
 
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

No comments: