மோசமான கருத்துக்களை சென்சார் - ட்விட்டர் அதிரடி

 இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம் வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என அறிவித்துள்ளது.

இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன் மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது.

இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இணையவெளியில் கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி வரும் தளங்களுக்கு கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடமளிக்கின்றன. இந்த நிறுவனங்களின் தேடியந்திரங்கள் (search engines) எல்லா வகையான தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள் தடை செய்வதில்லை. ஆனால் சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது.

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மத ரீதியான வக்கிரமான கருத்துக்களைப் பரப்பும் தளங்களை தடை செய்துள்ளனர். இங்கெல்லாம் கூகுளைத் தட்டினால் இந்த வகைத் தளங்களைப் பார்க்க முடியாது.

சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு புராஜக்ட் எனும் சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது.

அதேபோல, ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய தளஙக்களை சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை வலியுறுத்துவதால் அதை கடுமையாக பின்பற்றுகின்றன கூகுள் போன்றவை.

ஆனால் இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக் கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும் நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு மீறல்கள் மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரி்வித்து வருகின்றனர்.

இந்த நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும் சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை, ஏன் இந்த குப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றன.

இணையவெளியை கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதை செய்ய மாட்டோம் என்றும், அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் பம்மாத்து பண்ணியது.

ஆனால் கூகுளுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு சட்டப்படி வலியுறுத்தினால், தேசவிரோத, கலாச்சார விரோத கருத்துக்கள்- படங்களை நீக்கிவிடுகிறோம் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் சீனாவில் நுழைய திட்டம் போடுகிறது. அதனால்தான் உடனடியாக இப்படி இறங்கி வந்துள்ளது. கூகுளும் யாஹூவும் ஏற்கெனவே சீனாவில் உள்ளன, என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூகுளும் யாஹூவும் சீனாவில் ஏற்கெனவே காலூன்றிவிட்டது உண்மைதான். ஆனால் எப்படி? சீனாவின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்று, அனைத்து மோசமான கருத்துக்களையும் நீக்கிய பிறகே வெளியிடுகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

300 மில்லியன் பயனர்களைக் கொண்ட ட்விட்டரின் இந்த அறிவிப்பால், ஆட்சியாளர்கள் இணைய வெளியை கட்டுப்படுத்தும் வகையிலான விசேஷ சட்டத்தை இயற்றுவது அவசியமாகியுள்ளது. இப்படி ஒரு சட்டம் வந்தால், கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தாமாகவே இணையதளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வார்கள்.

Post a Comment

1 Comments

கூகுளும், பேஸ்புக்கும் இவ்வாறு செய்தால் நாடு கொஞ்சம் உருப்படும் ! நன்றி சார் !