ஓய்வு பெறுகிறாரா கேப்டன் தோனி?

by 12:21 AM 0 comments
வரும் 2015ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டுமென்றால், ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்கிறார் தோனி. இதன்மூலம், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதை சூசகமாக தெரிவித்தார். 
டெஸ்ட், "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் தோனி, 30. மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து, இதுவரை 175 போட்டிகளுக்கு கேப்டனாக பங்கேற்றுள்ளார். 
ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் கேப்டனாக அசத்தும் இவர், டெஸ்டில் மட்டும் சொதப்புகிறார். சமீபத்தில் அன்னிய மண்ணில் இவரது தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இவரது தலைமையில் விளையாடிய 36 டெஸ்டில், 17ல் தான் இந்திய அணி வென்றது. 
இதனிடையே இன்று துவங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட், மற்றும் ஓய்வு குறித்து தோனி அளித்த பேட்டி:
வரும் 2015 ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால், எதாவது ஒரு வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டும். எனக்கு இப்போது வயது 30 தான். இதற்குள் ஓய்வு குறித்து பேசக் கூடாது தான். இருப்பினும் இதற்கான சரியான நேரம் இது தான். 
தவிர, உலக கோப்பை தொடரின் போது நான் எங்கு இருப்பேன், எனது உடற்தகுதி, "பார்ம்' எப்படி இருக்கும் என்பதற்கு ஏற்பத் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் அதுவரை நிலைத்து இருக்க வேண்டும். ஒருவேளை நான் 2014 வரை போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தால், உலக கோப்பை தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். 
ஏனெனில், திடீரென அணியில் புதியதாக விக்கெட் கீப்பர் இடம்பெற்றால் அவர், எப்படியும் 30 போட்டிகளுக்கு மேல் பங்கேற்றிருக்க முடியாது. இது உலக கோப்பை தொடருக்கு போதாது. 
உலக கோப்பைக்கான அணியில், எனது இடத்தை பெற வேண்டும் என்றால், குறைந்தது அந்த வீரர் 60 முதல் 100 போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆகையால், 2013 முடிவில் எனது உடற்தகுதிக்கு ஏற்ப, ஏதாவது ஒரு போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 
பலவீனம் உண்டு:
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் 20 ஓவர்களுக்குப் பின், பந்துகள் "சுவிங்' ஆக மறுக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் பலவீனம் உண்டு. இதில் இருந்து எவ்வளவு விரைவில் மீண்டு வருகின்றனர் என்பது தான் முக்கியம். இதேபோல ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் பலவீனம் உண்டு. 
நிலையில்லாத "பேட்டிங்':
தவிர, எந்த "பேட்டிங் ஆர்டரும்' நிலையில்லாதது தான். பவுலர்கள் எந்தளவுக்கு பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுத்து, தவறு செய்ய தூண்டுகின்றனர் என்பதைப் பொறுத்துதான் "பேட்டிங்' அமையும். 20 முதல் 25 ஓவர்களுக்குப் பின், பந்து "பேட்டிங்' செய்ய சாதகமாக வரும். இதன் பின் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வது குறைவு தான். 
மொத்தத்தில் இன்றைய போட்டியில், எங்களால் முடிந்தவரை திறமை வெளிப்படுத்துவோம். இந்த போட்டிக்காக நன்கு பயிற்சி செய்துள்ளோம். இது களத்தில் வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 
இவ்வாறு தோனி கூறினார்.
---
                                         ஆடுகளத்தில் "பார்ட்டி'
டெஸ்ட் போட்டி துவங்கும் முன் ஆடுகளம், தார்ப்பாயால் மூடப்பட்டு, பாதுகாக்கப்படும். ஐ.சி.சி., விதிமுறைப்படி இதன் அருகில் யாரும் செல்லக்கூடாது. இந்த விதி, பெர்த்தில் மீறப்பட்டுள்ளது. போட்டி துவங்க 14 மணி நேரமே இருந்த நேரத்தில், நேற்றிரவு ஆடுகளத்தின் அருகில் சிலர், கையில் "பீர்' பாட்டில்களுடன் "பார்ட்டி' கொண்டாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
                                       "போதை' ரசிகர்கள்
 தோனி கூறுகையில்,"" ஆஸ்திரேலிய ரசிகர்கள் காலையில் நல்லவர்கள் தான். அடுத்தடுத்து"பீர்' உள்ளே சென்றதும், மாலை நேரத்தில் போதையில் கெட்டவர்களாகி விடுகின்றனர். இதன் பின் இவர்களை சமாளிப்பது கடினம். கோஹ்லி, இஷாந்தைப் பொறுத்தவரையில், சிலர் தேவையில்லாமல் பேசத்துவங்கியதால் ஆத்திரப்பட்டனர்,'' என்றார்.
----
                              எங்களுக்குள் மோதல் இல்லை
இந்திய அணியில் பிளவு என்ற செய்தி குறித்து தோனி கூறுகையில்,"" இந்திய வீரர்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒருபோதும் நான் பார்த்தது இல்லை. ஒரு வீரரின் வெற்றியை மற்றவர்கள் கொண்டாடுகிறோம். இது தான் இந்திய அணியின் வலிமை. இந்த விஷயத்தில் நாங்கள் உண்மையில் பெருமைப்படுகிறோம்,'' என்றார்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: