சசிகலா அண்ணி இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் அதிமுகவிலிருந்து நீக்கம்

சசிகலா குடும்பத்தில் எஞ்சியுள்ளவர்களையும் கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கையில் முதல்வர் ஜெயலலிதா இறங்கியுள்ளார். அதன் ஒரு கட்டமாக இன்று சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் இன்று நீக்கப்பட்டார்.

சமீபத்தில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரை அதிரடியாக கட்சியை விட்டுத் தூக்கினார் ஜெயலலிதா. சசிகலா, நடராஜன் ஆகியோர் முக்கியமானவர்கள்.இருப்பினும் சசிகலாவின் அண்ணி இளவரசி, அவரது சம்பந்தி கலியபெருமாள் மற்றும் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா ஆகியோர் மட்டும் நீக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது கலியபெருமாளை விரட்டியுள்ளார் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் திருச்சி கலியபெருமாள், பழனிவேல் ஆகியோர் நீக்கப்படுகின்றனர். இவர்களுடன் கட்சி உடன்பிறப்புகள் எந்தவகையான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

இளவரசியின் சம்பந்திதான் கலியபெருமாள். இவர் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் நியமனத்தில் முக்கியப் பங்காற்றியவர். சசிகலாவுக்கும், இவருக்கும் ஆகாது என்று கூறப்பட்டு வந்தது. மேலும், இளவரசியும் கூட சசிகலாவுக்கு ஆகாதவர் என்றே கூறப்பட்டு வந்தது.
ஆனாலும் தற்போது கலியபெருமாள் நீக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அவரும் 'கூட்டுக் களவாணி'யாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.

கலியபெருமாளைத் தொடர்ந்து இளவரசியும், அனுராதாவும் கூட தூக்கி எறியப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்களையும் கட்சியை விட்டு தூக்கி விட்டால் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் அதிமுகவில் இல்லை என்ற நிலை ஏற்படும்.

No comments: