ஜெ.வுடன் சமரசத்திற்கு கடுமையாக முயலும் சசிகலா

முதல்வர் ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா தரப்பு கடுமையாக முயல்வதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் தற்போது ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அணுகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில் சசிகலா குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு அதிமுகவை விட்டு வெளியேற்றினார். மேலும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசி குடும்பம் வெளியேற்றப்பட்டது. தற்போது அங்கு தங்கியிருப்பது சசிகலாவின் அண்ணி இளவரசி மட்டுமே.

வெளியேற்றப்பட்ட சசிகலா தரப்பு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறது. நீக்கம் தொடர்பாக இதுவரை சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாருமே கருத்து தெரிவிக்காமல் பலத்த அமைதி காத்து வருகின்றனர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இப்படி அத்தனை பேரும் மொத்தமாக மெளனம் காக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் சைலன்ட்டாக ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா குடும்பத்தினர் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ன.

ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதால் அவரிடம் நேரடியாக போய் சமரசம் பேச அச்சப்பட்ட சசிகலா தரப்பு ஜெயலலிதாவுக்கு நெருக்கமான வட்டத்தை அணுகி சமரசம் செய்யுமாறு கேட்டு வருவதாக தெரிகிறது.

இதற்காக அவர்களில் முதலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க முயன்றனராம். இதற்காக சிலரை மோடியிடம் அனுப்பி வைத்தனராம். ஆனால் அவர்களை திட்டி அனுப்பி விட்டாராம் மோடி. இதுதொடர்பாக இனிமேல் என்னிடம் யாரும் வராதீர்கள் என்றும் கூறி விட்டாராம்.

இதையடுத்து அடுத்து சந்திரபாபு நாயுடுவை அணுகியுள்ளதாம் சசிகலா தரப்பு. ஒரு ஆந்திர தொழிலதிபர் மூலமாக நாயுடுவை சசிகலா தரப்பு அணுகியுள்ளதாக கூறுகிறார்கள். அந்தத் தொழிலதிபரும் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்குமாறு நாயுடுவைக் கேட்டுக் கொண்டுள்ளாராம். மோடி போல நடந்து கொள்ளாமல் சசிகலா தரப்பு கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டுள்ளாராம் நாயுடு.

இதனால் சற்று நம்பிக்கையுடன் சசிகலா தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் ஜெயலலிதாவுடன் நாயுடு பேசி சமரசம் ஏற்படுத்த முயல்வார் என்று சசிகலா தரப்பு பெருத்த நம்பிக்கையி்ல் உள்ளது.

இந்த சமரச முயற்சிகள் காரணமாகத்தான் ஜெயலலிதாவின் நடவடிக்கை குறித்து எதுவும் பேசாமல் கப்சிப்பென சசிகலா தரப்பினர் இருப்பதாக கூறுகிறார்கள்.

Post a Comment

0 Comments