அன்னா உண்ணாவிரதத்திற்கு ரஜினி ஆதரவு

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர். உண்ணாவிரதத்தில் அவரும் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சமீபத்தில் சென்னைக்கு அன்னா ஹசாரே வந்திருந்தபோது தொலைபேசி மூலம் அவரிடம் பேசி அவரது போராட்டத்துக்கு அன்னா வாழ்த்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.

அன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த். டெல்லியில் அவர் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவருடன் தானும் உண்ணாவிரதம் இருக்க விரும்பியதாகவும், ஆனால் உடல் நலன் காரணமாக இருக்க முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார் ர ஜினி.

இந்த நிலையில் அன்னா ஹசாரே மும்பையில் இன்று மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். அதேசமயம் நாட்டின் அனைத்து நகரங்களிலும் இந்திய ஊழல் ஒழிப்பு அமைப்பினரும் உணணாவிரதம் தொடங்குகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டம் ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.

இலவசமாகவே இந்த மண்டபத்தை ரஜினி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் மீடியா ஒருங்கிணைப்பாளர் பானு கோமஸ் கூறுகையில், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை எங்களுடன் பத்து நிமிடங்கள் இருந்து நேரில் பார்த்தார் ரஜினிகாந்த். ஊழலுக்கு எதிராக தானும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் தற்போது நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் ஊழலுக்கு எதிரான எந்த சட்ட மசோதாவுக்கும் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று எங்களிடம் தெளிவுபடுத்தினார்.

டிசம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தனது மண்டபத்தை இலவசமாக கொடுத்துள்ளார் ரஜினி. அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அன்னா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.3 நாள் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு முடிவடையும்.இதுவரை 200 பேர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள முன்வந்து பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்றார் கோமஸ்.

No comments: