டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய கலெக்டர் சகாயம் உறுதி

"டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்' என, கோரிய ஓரடி உயர மாணவருக்கு உதவி செய்வதாக மதுரை கலெக்டர் சகாயம் உறுதியளித்தார். மதுரை மேலக்காலை சேர்ந்த முத்துமாரி. இவர் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு இடுப்பில் தனது மகனுடன் வந்தார். கலெக்டர் சகாயத்தை சந்தித்த அவர், தனது மகனின் படிப்புக்கு உதவ வேண்டும், எனக் கூறினார். கலெக்டர் அவரிடம், "சரி, உங்கள் மகனை எங்கே?' என கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். உடனே முத்துமாரி, தனது இடுப்பில் இருந்த சிறுவனை கலெக்டரின் மேஜை மீது இறக்கி வைத்தார். ஒரு அடிஉயரத்தில் எழுந்து நின்ற அச்சிறுவனை பார்த்து கலெக்டர் சகாயம் உட்பட அதிகாரிகள் வியந்தனர்.

கலெக்டர் சகாயம், அச்சிறுவன் பற்றி கேட்க, "போதிய வளர்ச்சி இல்லாத தினேஷ், மேலக்கால் கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பதாக' தெரிவித்தார் முத்துமாரி. அச்சிறுவனிடம், "நீ என்ன படிக்க விரும்புகிறாய்? என கேட்டார். சற்றும் தயங்காத அச்சிறுவன், "நான் டாக்டராகி சேவை செய்ய விரும்புகிறேன்,' என்றார். ""சபாஷ், இந்த எண்ணம் வந்தபோதே "மினி' டாக்டராகிவிட்டாய். உனது மனுவை பரிசீலித்து, வரும் புதன்கிழமைக்குள் உதவி செய்கிறேன். நன்கு படித்து "பெரிய' ஆளாகி எல்லோருக்கும் உதவணும்,'' என்ற கலெக்டர் சகாயம், தினேஷூக்கு பொன்னாடை போர்த்தினார். முத்துமாரி நன்றி தெரிவித்து வெளியே வந்தார்.

அவர் கூறுகையில், ""லோடுமேனாக இருந்த எனது கணவர் இறந்துவிட்டார். நான் தனியார் நிறுவனத்தில் கூலிவேலை செய்கிறேன். போதிய வளர்ச்சி இல்லாத எனது மகனின் கல்விக்காக உதவி கேட்டு வந்தேன்,'' என்றார்.

Post a Comment

0 Comments