தி டர்ட்டி பிக்சர் விமர்சனம்

நடிகையாகும் ஆசையில் மெட்ராஸ் வரும் விஜயலட்சுமி என்ற கிராமத்துப் பெண், சினிமாவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு சில்க் ஸ்மிதாவாக விஸ்வரூபமெடுத்த கதைதான் "தி டர்ட்டி பிக்சர்'.இயக்குநர் ஆப்ரஹாம்(இம்ரான் ஹாஸ்மி) தன் வாழ்வில் வந்துபோன ரேஷ்மாவைப் (வித்யாபாலன்) பற்றிய நினைவலைகளில் மூழ்குவதாகப் படம் ஆரம்பிக்கிறது. 1980-களில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் வீட்டைவிட்டு மெட்ராஸýக்கு வருகிறார் ரேஷ்மா. 
             பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு சினிமாவில் டான்ஸராகிறார். வினுச்சக்கரவர்த்தியை நினைவுபடுத்தும் செல்வகணேஷ் என்ற தயாரிப்பாளர், ரேஷ்மாவுக்கு சில்க் என்று பெயர் மாற்றி வைத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக்குகிறார். 

அதன் பிறகு, சூப்பர் ஹீரோவான சூர்யகாந்த்(நஸ்ருதீன் ஷா) படமாக இருந்தாலும் சில்க் இருந்தால்தான் ஓடும் என்கிற அளவுக்குத் தவிர்க்க முடியாத சக்தியாகிறார். சில்க்கின் அதீத தன்னம்பிக்கையையும் வெற்றியையும் பொறுக்க முடியாமல் சினிமா உலகிலிருந்து அவரை ஓரம் கட்டுகிறது சூர்யகாந்த் உள்ளிட்ட கும்பல்.வாய்ப்புகள் குறைவதால், சொந்தப் படம் எடுத்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறார் சில்க். அதேநேரத்தில், மசாலா சினிமாவில் நம்பிக்கை இல்லாத ஆப்ரஹாம் கமர்ஷியல் படம் எடுத்து வெற்றி பெறுகிறார். தன் வெற்றிக் கொண்டாட்டத்தைப் பகிர்ந்து கொள்ள சில்க்கைத் தேடி வரும் போது தூக்க மாத்திரை தின்று இறந்து கிடக்கிறார். 
                    அவரை ஆப்ரஹாம் அடக்கம் செய்வது போல படம் முடிகிறது.சில்க் சுமிதாவின் காந்தக் கண்களோடும், கவர்ச்சிகரமான உடலமைப்போடும் ஒப்பிட முடியாவிட்டாலும் எடுத்த டிக்கெட்டுக்கு மோசம் வைக்காமல் ரசிக்க வைக்கிறார் வித்யா பாலன். வித்யா இல்லாத காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவுக்கு ஃப்ரேம் டூ ஃப்ரேம் அவரது ஆதிக்கம்தான். இரண்டே காட்சிகளில் மட்டும் முழுக்கப் போர்த்திக் கொண்டு வருகிறார். மற்றபடி எங்கேயும் எப்போதும் பாத்ரூமிலிருந்து பாதியில் வந்ததுபோலவே இருக்கிறார். சூப்பர் ஹீரோவாக சூர்யகாந்த் என்ற வேடம் நஸ்ருதீன் ஷாவுக்கு(ரஜினி?). ""சில்க்கை ஓரம் கட்டுங்க. ஹீரோயினையே கிளாமர் பண்ண வைங்க. புதுசா இருக்கும்..'' என்று தன் பங்குக்கு சில்க்குக்குக் கெடுதல் செய்யும் வேடம். மற்றபடி அத்தனை முதிர்ச்சியான இவரை ஏன் இந்த வேடத்திற்கு தேர்வு செய்தார்கள் என்று புரியவில்லை. 
ஒரு கர்வமான படைப்பாளியைக் கண்முன் நிறுத்துகிறார் இயக்குநராக வரும் இம்ரான் ஹாஸ்மி. படத்தில் ஆறுதல் அளிக்கும் கதாபாத்திரம் இவருடையதுதான்.மற்றபடி, கவர்ச்சி.. கவர்ச்சி.. கவர்ச்சி.. என்று சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் இருந்த கவர்ச்சியை மட்டும்தான் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைச் சொல்ல 10% கூட நேரம் இல்லாமல் பணம் பார்க்கும் நோக்கில் படம் எடுத்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.சினிமா வாய்ப்புக்காக அவர் எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தார், நீலப் படங்களில் நடித்தார்.. என்று எந்த அளவுக்கு இறந்துபோன ஒரு பெண்ணைக் களங்கப்படுத்திக் காசு பார்க்க முடியுமோ அந்த அளவையும் தாண்டிச் சென்றிருக்கிறது டர்ட்டி பிக்சர்.1980-களில் நடக்கிறது கதை. ஆனால் மருந்துக்குக் கூட உடைகளிலோ, கலை அலங்காரத்திலோ எந்த கவனமும் இல்லை, பாத்திரத் தேர்வுகளிலும் அநியாய அலட்சியம். ஒரு போகப் பொருளாகத் தங்களது சுயநலத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு சில்க் ஸ்மிதாவுக்கு துரோகமிழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருந்திருப்பார்கள். அந்தப் பட்டியலில் இந்தப்படம் தயாரித்த ஏக்தா கபூர், இயக்குநர் மிலன் லுத்ரியா, கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ராஜட் அரோரா ஆகிய மூவருக்கும் முதல் மூன்று இடங்கள் உண்டு.
                  ____________________________________________________
courtesy.cinemaexpress

Post a Comment

2 Comments

Madhav said…
The best review for this picture...

ஒரு போகப் பொருளாகத் தங்களது சுயநலத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு //சில்க் ஸ்மிதாவுக்கு துரோகமிழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருந்திருப்பார்கள். அந்தப் பட்டியலில் இந்தப்படம் தயாரித்த ஏக்தா கபூர், இயக்குநர் மிலன் லுத்ரியா, கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ராஜட் அரோரா ஆகிய மூவருக்கும் முதல் மூன்று இடங்கள் உண்டு.//

100 % true.
ReeR said…
நல்ல திரை விமர்சனம்

நன்றி.

www.padugai.com

Thanks