கரூர் பழைய பஸ்ஸ்டாண்டை சீரமைக்க ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்

கரூர் பழைய பஸ்ஸ்டாண்டை சீரமைக்க ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுவதாக, விரிவாக்கம் செய்யப்பட்ட பெரு நகராட்சியில் தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளதால், நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறநகர் பகுதிக்கு பஸ்ஸ்டாண்டை மாற்றும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. திருச்சி மாவட்டத்தில் இருந்து கரூர் என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவாகும் முன்பு, கடந்த 1984ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி தற்போது உள்ள இடத்தில் பஸ்ஸ்டாண்ட் செயல்பட துவங்கியது. ஆரம்பத்தில் 50 பஸ்கள் நிறுத்தப்படும் வகையில் இருந்த பஸ்ஸ்டாண்ட், பிறகு நான்கு ஆண்டுகளில் 70 பஸ்கள் வரை நிறுத்தும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் "ஏ' கிரேடு அந்தஸ்து பெற்ற கரூர் பஸ்ஸ்டாண்டில் டவுன் பஸ்களும் தற்போது நிறுத்தப்பட்டு வருகிறது. திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட தென்மாநில நகரங்களை இணைக்க கூடிய மையமாக கரூர் உள்ளது. கரூர் தனி மாவட்டமாக அறிவிக்கும் முன்பாக டெக்ஸ்டைல்ஸ், பஸ்பாடி கட்டும் தொழில் மற்றும் கொசுவலை உற்பத்தி தொழிலும் அதிகரித்தது. இதனால் நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் திருச்சி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூருக்கு வருகின்றனர். குறிப்பாக நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பஸ்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கரூர் பஸ்ஸ்டாண்டுக்கு வருகின்றனர். இதனால் "கரூர் பஸ்ஸ்டாண்ட் பகுதிகளான கோவை ரோடு, தின்னப்பா தியேட்டர் ரோடு மற்றும் ரவுண்டனா பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து நகர மையப்பகுதியில் உள்ள கரூர் பஸ்ஸ்டாண்டை, புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும்' என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். "சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய கரூர் நகராட்சி கூட்டத்திலும், கரூர் பஸ்ஸ்டாண்டை சுக்காலியூர் பகுதிக்கு மாற்ற வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் கரூர் வந்த சட்டசபை உறுப்பினர்கள் குழுவும், "பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பஸ்ஸ்டாண்டை புறநகர் பகுதிக்கு நவீன வசதியுடன் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்து சென்றனர். 
                  ஆனால் ஆண்டுகள் பல ஆனபின்னரும் கரூர் பஸ்ஸ்டாண் டை புறநகருக்கு மாற்றியபாடில்லை. இதனால் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கரூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள பகுதியில் மினி பஸ்களும் நிறுத்தப்படுவதால், விழாக்காலங்களில் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, கரூர் நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க, பஸ்ஸ்டாண்டை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்றார். ஏற்கனவே, கடந்த 2009ம் ஆண்டு நடந்த எம்.பி., தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை வெற்றி பெற்ற நிலையில், கடந்த மாதம் நடந்த கரூர் நகராட்சி தலைவர் தேர்தலிலும் அ.தி.மு.க., வை சேர்ந்த செல்வராஜ் வெற்றி பெற்றார். இதனால் கரூர் பஸ்ஸ்டாண்டை புறநகர் பகுதிக்கு மாற்ற எந்த தடையும் இருக்காது என பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நினைத்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த கரூர் நகராட்சி முதல் கூட்டத்தில், தற்போது இயங்கி வரும் பஸ்ஸ்டாண்டை ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்க அனுமதி அளிக்க கோரிய தீர்மானம் இடம் பெற்றிருந்தது. கரூர் நகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 34 வார்டுகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்று இருப்பதால் பழைய பஸ்ஸ்டாண்டுக்கு ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் ஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் கரூர் நகரப்பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு பஸ்ஸ்டாண்டை மாற்றும் திட்டம் நிரந்தரமாக மூடுவிழா நடத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments