இங்கிலாந்து அணியை புரட்டி எடுத்த இந்திய அணி -இந்தியாவுக்கு இமாலய வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 36.1 ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.



 கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி 70 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து, அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. பார்தீவ் படேல், ரஹானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
 4-வது ஓவரிலேயே 9 ரன்களில் பார்தீவ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். தொடர்ந்து கம்பீர் களமிறங்கினார். மெதுவாக விளையாடிய ரஹானே 41 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
 தொடர்ந்து கம்பீருடன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கம்பீர் 32 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து களம் கண்ட ரெய்னா சிறப்பாக விளையாடினார். இதனால் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இதனிடையே கோலி 37 ரன்களில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 28.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.


 ரெய்னா, தோனி அபாரம்: அடுத்து ரெய்னாவுடன், கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். 52 பந்துகளில் ரெய்னா அரைசதம் எடுத்தார். 61 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும்.
 தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் ஸ்கோர் உயர உதவினார். 45-வது ஓவரில் அவர் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.
 இதனிடையே 48 பந்துகளில் தோனி 50 ரன்களை எட்டினார். அவர் அவ்வப்போது பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பினார்.
 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வினும் 8 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார்.


 15 ஓவர்களில் 150 ரன்: முதல் 35 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் தோனி, ரெய்னாவின் அபார ஆட்டத்தால் கடைசி 15 ஓவர்களில் இந்திய அணி மேலும் 150 ரன்கள் குவித்தது.
 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. தோனி 87 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 10 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அவர் இந்த ரன்களை எடுத்தார்.


 வீழ்ந்தது இங்கிலாந்து: 300 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் குக், கீஸ்வெட்டர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கீஸ்வெட்டர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பீட்டர்சன் 19, டிராட் 26, போபாரா 8, பெய்ர்ஸ்டவ் 8 என விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
 குக் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 60 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 174 ரன்களில் இங்கிலாந்து சுருண்டது.
 இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

 நேரடி ஒளிபரப்பில் தாமதம்

 இந்தியா - இங்கிலாந்து முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பில் தாமதம் ஏற்பட்டது.
 இதனால் முதல் 3 ஓவர்களை டி.வி.யில் ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒளிபரப்பில் தாமதம் ஏற்பட்டதாக ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள நியோ கிரிக்கெட் சேனல் காரணம் தெரிவித்தது.
 போட்டி தொடங்கி சுமார் 15 நிமிடங்களுக்குப் பின் நேரடி ஒளிபரப்பு தொடங்கியது. இங்கிலாந்திலும் நேரடி ஒளிபரப்பில் தாமதம் ஏற்பட்டது.
 
 கூட்டம் இல்லை
 இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை. போட்டி நடைபெற்ற ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் 40 ஆயிரம் பேர் வரை அமரலாம். ஆனால் சுமார் 22 ஆயிரம் பேர் மட்டுமே போட்டியைக் காண வந்திருந்தனர்.
 இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்திடம் தொடர் தோல்வியைச் சந்தித்ததால் ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர். மேலும், தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் சிறிது சலிப்பும் ஏற்பட்டு விட்டதும்தான் இந்த மாற்றத்துக்குக்  காரணம் என்று தெரிகிறது.


 இது தொடர்பாக ஹைதரபாத் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் கூறுகையில், சமீபகாலமாக இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பாக அமையவில்லை. இது தவிர இப்போது பண்டிகை காலம் என்பதால் அதிக பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் முன்வரவில்லை என்று தெரிவித்தனர்.


 ÷இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.300 முதல் ரூ.10,000 வரை உள்ளன. இதில் ரூ.300-க்கான டிக்கெட்தான் அதிகம் விற்பனையானது. ரூ.10,000-த்துக்கான இடங்கள் காலியாகவே இருந்தன. ரூ.3000 முதல் ரூ.4000 வரையிலான டிக்கெட்டுகளும் பெருமளவில் விற்பனையாகவில்லை.















































Post a Comment

1 Comments

aotspr said…
இந்திய அணிக்கு என்னுடைய பாராட்டுகள்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com