எல்லாம் அவன் செயல்

பகவானின் கருணையால் கிடைத்தது இந்த மனித ஜென்மா. பிறக்கும் போது எதுவும் கொண்டு வரவில்லை; போகும் போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. போகும் போது, பாவம், புண்ணியம் என்ற இரண்டு மட்டுமே கூட வரும்; இது, பொதுவான வேதாந்தம்.


மனிதன் பிறந்த பிறகு, அவன் செல்வந்தனாகிறான். ஏராளமான பணம், எப்படி செலவழிப்பதென்றே தெரியாமல், மனம் போனபடி செலவு செய்கிறான்; இது சரியல்ல. கிடைத்த செல்வம் அனைத்தும் பகவான் கொடுத்தது. அதை, தர்ம மார்க்கத்தில் செலவிட வேண்டும் என்பது தான், தெய்வத்தின் எண்ணம். அதன்படி செய்ய வேண்டும்.

ஜெயவந்தர் என்பவர் பெரிய வியாபாரி. நிறைய பொருள் சேர்த்தார். அவருக்கு, ஆறு பிள்ளைகள். மேலும், மேலும் பொருள் சேர்த்தால், நாம் அதற்கு அடிமையாகி விடுவோம் என்று உணர்ந்தார். தன் பொருட்களையெல்லாம் ஏழை, எளியவர்களுக்கு வாரி வழங்கினார்.

இதைக் கண்ட அவரது புதல்வர்கள், மனம் கலங்கினர். இவர் இப்படி தானம் செய்து கொண்டிருந்தால், நமக்கு என்ன மிச்சம் இருக்கும் என்று தோன்றியது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, அந்த ஊர் ராஜாவிடம் முறையிட்டனர்.

ராஜா யோசித்தான்... ஜெயவந்தர் எல்லா பொருட்களையும் தானம் செய்வது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தான். ஜெயவந்தரை அழைத்து வர கட்டளையிட்டான். ஜெயவந்தர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் கோபமாகப் பேசினான் ராஜா...

"உன்னிடமுள்ள பொருட்களை, பிள்ளைகளிடம் சேர்க்காமல், சோம்பேறிகளுக்கு வாரி வழங்குகிறீரா... இது என்ன நியாயம்?' என்று கேட்டான். அதற்கு ஜெயவந்தர், "நான் செல்வத்தை சோம்பேறிகளுக்குக் கொடுக்கவில்லை; இறைவனின் புகழ்பாடும் அடியர் களுக்கு தான் கொடுக்கிறேன்...' என்றார் பணிவுடன். அரசனுக்கு இவரது பதில், திருப்தி அளிக்கவில்லை.
அதனால், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறினான். "இவரை ஒரு கோணியில் கட்டி, குளத்துத் தண்ணீரில் மூழ்கடியுங்கள்!' என்று உத்தரவிட்டான். மனம் கலங்கவில்லை ஜெயவந்தர். "எல்லாம் அவன் செயல்...' என்றிருந்தார்.

மறுநாள், ஜெயவந்தரை ஒரு கோணியில் கட்டி, குளத்தில் போட்டு மூழ்கச் செய்தனர் வீரர்கள். ஊர் மக்கள் கூடி விட்டனர். "தர்மத்தையே நம்பி வாழ்ந்தவருக்கு இப்படியொரு கதியா?' என்று கண்ணீர் விட்டனர்.

அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. குளத்தில் மூழ்கடித்த மூட்டை, மேலே வந்து மிதந்தது. அது, மெதுவாக கரையை நோக்கி வந்தது. மிகப் பெரிய பொன்னிறமான ஆமை ஒன்று, மூட்டையை முதுகில் சுமந்து வந்து, கரையில் இறக்கி வைத்து விட்டு, நொடியில் மறைந்து விட்டது.
வீரர்களும், மக்களும் திகைத்து நின்றனர்.

விஷயம் அரசனுக்கு எட்டியது. குதிரை மீது ஏறி குளத்துக்கு வந்து, அவசர, அவசரமாக மூட்டையைப் பிரித்தான் அரசன். உள்ளே பத்மாசனம் போட்டு, நிஷ்டையில் ஜெயவந்தர் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, அவரை வெளியில் தூக்கினான். அவர் காலடியில் விழுந்து வணங்கி, மன்னிப்பு கேட்டான்; மனம் திருந்தினான்.



"இறைவன், உங்களுக்கு பக்தியை போதிக்கவே, இப்படி எனக்கொரு தண்டனை அளித்திருக்கிறான்; நீங்கள் வருந்த வேண்டாம்...' என்றார் ஜெயவந்தர். மனம் திருந்திய அரசன், இவரையே ஞானாசிரியனாகக் கொண்டான். நாடு முழுவதும் பக்தியைப் பரப்பினான். தான, தர்மங்கள் செய்தான்; நாடும், மக்களும் நல்வாழ்வு பெற்று விளங்கினர்.
தெய்வ பக்தி, தானம், தர்மம் என்பதெல்லாம், ஒரு நாளும் வீணாவதில்லை. ஆரம்ப கட்டத்தில் பல இடையூறுகள் நேரலாம். திட சித்தத்துடன் அவைகளை எதிர்த்துப் போராடினால், வெற்றி கிடைக்கும்.
பக்திக்கும், தான, தர்மத்துக்கும் என்றுமே குறைவு ஏற்படாது. வாழ்நாளில் இவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.



source.vaaramalar

Post a Comment

2 Comments

hamaragana said…
அன்புடன் நண்பருக்கு வணக்கம்
மிக நல்ல கருத்துரை ..வாழ்க
ADMIN said…
இறை நம்பிக்கையை கொணரும் பதிவு.வாழ்த்துக்கள்..!