மாயாவதி விக்கிலீக்ஸ் அசாஞ்ச் சண்டை


தன்னை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று சாடிய உத்தர பிரதேச முதல்வருக்குபதிலடி தரும் வகையில், "மாயாவதி தலித்துகளுக்கே துரோகம் இழைத்து வருகிறார்," என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் குற்றம்சாட்டியுள்ளார்.


அமெரிக்க தூதரக கேபிள்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்கள் அடிப்படையில் வெளியான செய்தியை முன்வைத்து, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் ஒரு மனநோயாளி என்றும், அவரை மனநல காப்பகத்தில் தான் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி கடுமையாக சாடியிருந்தார்.

தனக்கு புதிதாக காலணி வாங்க வேண்டுமானால், தனது காலியான ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைப்பார்
என்று மாயாவதி குறித்து விக்கிலீக்ஸ் மூலம் தகவல் வெளியாகியிருந்தது. இதை மறுத்த மாயாவதி, விக்கிலீக்ஸை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, மாயாவதிக்கு பதிலளிக்கும் வகையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் வெளியிட்ட செய்தி:

"மாயாவதி தலித்துகளுக்கு துரோகம் இழைக்கிறாரோ என்று வலுவான சந்தேகம் எழுகிறது. அமெரிக்க தூதரகம் மூலம் வாஷிங்டனுக்கு பகிரப்பட்ட ஆவணங்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இது, அமெரிக்க மக்கள் உள்பட உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரக அதிகாரி தனது நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரிக்கு அனுப்பிய தகவலில் குறிப்பிட்டுள்ளவற்றையே அம்பலப்படுத்தியிருக்கிறோம். அந்தத் தகவல்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால், ஹிலாரியைத் தான் அவர் அணுக வேண்டும். அவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால், அவர் இங்கிலாந்துக்கு ஒரு ஜெட் விமானத்தை அனுப்பி என்னை அழைத்துகொண்டு போகலாம். நான் 272 நாட்களாக இருக்கிறேன். அவர் சொன்னபடியே மனநல காப்பகத்திலும் சேருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குறிப்பாக, எனக்குப் பிடித்த இந்திய தேசத்தில் அரசியல் புகலிடம் கிடைப்பதும் மகிழ்ச்சியே. நான் வரும்போது, மாயாவதிக்கு இங்கிலாந்தில் இருந்து சிறப்பான காலணியை வாங்கி வருவேன்," என்று அசாஞ்ச் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments