கரூர் மாவட்டத்தில் கேப்டன் டிவி ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்

கரூர் மாவட்டத்தில் கேப்டன் டிவி ஒளிபரப்பு திடீரென நிறுத்தம் செய்யப்பட்டதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. உடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திந்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க-வை பேச்சு வார்த்தைக்கே அழைக்காமல் அ.தி.மு.க. தனித்து செயல்பட்டது. இதனால் தே.மு.தி.க. தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் மயிலாப்பூரில் நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை மேயரை அறிமுகம் செய்து வைத்து விஜயகாந்த் பேசினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சில் வழக்கம் போல் நக்கல், நையாண்டி, அரசியல் அனல் என சூடு பறந்தது. அவ்வப்போது ஆளுங்கட்சியை மறைமுகமாக போட்டு தாக்கினார். இதை தே.மு.தி.க கட்சியின் கேப்டன் டிவி நேரடி ஒளிப்பரப்பு செய்தது.

இந்நிலையில், தமிழக அரசு கேபிள் டிவியில் இருந்து சத்தமின்றி கேப்டன் டிவி நீக்கப்பட்டுள்ளது. கேப்டன் டிவி-க்கு பதில் பாலிமர் தொலைக்காட்சியை 2 முறை வருமாறு செய்துள்ளனர். இதனால் தே.மு.தி.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments: