இந்தியா செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு


இந்தியாவில் நான்கு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இங்கிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது-20 போட்டியிலும் விளையாடவுள்ளனர்.
அலிஸ்ட்டர் குக் தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஸ்டுவர்ட் மீக்கர் முதல் முறையாக இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடாத கெவின் பீட்டர்சன், ஸ்காட் போர்த்விக் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்தத் தொடரின் போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 15 பேரைத் தவிர அக்டோபர் மாதம் இருபது-20 போட்டி தொடங்குவதற்கு முன்னர் மேலும் இரு வீரர்கள் அணியில் இனைந்து கொள்வர்.
போட்டிகளுக்காக இந்தியா செல்லும் இங்கிலாந்து அணி அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களையும், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட சில இளைஞர்களையும் கொண்ட சிறப்பான கலவை என்று இங்கிலாந்து அணியின் தேர்வுக் குழுவின் தலைவர் ஜெஃப் மில்லர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் விபரம்

இந்தியா செல்லும் அணியில் அலிஸ்ட்டர் குக், ஜோனதன் பாரிஸ்டோவ், இயன் பெல், ரவி போப்பாரா, ஸ்காட் போர்த்விக், டிம் பிரெஸ்னன், ஜேட் டெம்பாக், ஸ்டீவன் ஃபின், கிரெய்க் கீஸ்வெட்டார், ஸ்டுவர்ட் மீக்கார். சமித் பட்டேல், கெவின் பீட்டர்ஸன், க்ராம் ஸ்வான், ஜோனதன் ட்ராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருபது-20 போட்டிகளுக்கு ஜொஸ் பட்லரும், அலெக்ஸ் ஹேல்ஸும் செல்லவுள்ளனர்.
அக்டோபர் மாதம் நான்காம் தேதி ஹைதராபாத் சென்றடையும் இங்கிலாந்து அணி, அங்கு இரண்டு 50 ஓவர்களைக் கொண்ட பயிற்சி ஆட்டத்தை அடுத்து, முதல் ஒருநாள் போட்டியை அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி விளையாடவுள்ளது.
அதன் பிறகு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி டில்லியிலும், 20 ஆம் தேதி மொஹாலியிலும், மும்பையில் 23 ஆம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டியை கொல்கத்தாவில் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியும் இந்திய அணிக்கு எதிராக ஆடவுள்ளனர்
ஒரேயொரு இருபது-20 போட்டி கொல்கத்தாவில் அக்டோபர் 29 ஆம் தேதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments