7-ஆம் அறிவு ஏ ஆர் முருகதாஸ் வேதனை




உலகமே கொண்டாடும் தமிழ் சாதனையாளர் போதி தர்மனைப் பற்றி உள்ளூர் தமிழர்கள் ஒருவருக்கும் தெரியவில்லையே, என வேதனைப்பட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

சூர்யா-சுருதிஹாசன் ஜோடியாக நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்துள்ள படம் 7-ஆம் அறிவு. பெரும் பொருட்செலவில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். படம், தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், "1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த போதி தர்மன் என்ற பல்லவ மன்னர் பரம்பரை இளவரசன், பின்னாளில் உலகம் முழுக்க பயணித்தான். அவனே பின் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை அங்கே நிறுவினான்.

அங்கே எங்கே பார்த்தாலும் போதிதர்மனுக்கு சிலைகள் உள்ளன. சீனாவின் புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் தமிழரான போதி தர்மனின் சிலையைப் பார்த்து சிலிர்த்துவிட்டேன்.

சீன மாணவர்கள் போதியை பாடமாகவே படிக்கிறார்கள். புத்த சமயத்தின் குருவாக அவரை மதிக்கிறார்கள். அவர் படைத்த சாதனைகள் கொஞ்சமல்ல
. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி அவன் பிறந்த காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

இனி வரும் தலைமுறையினர் போதி தர்மன் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட வேண்டும். இவ்வளவு பெரிய சாதனையாளனுக்கு சிலை எழுப்பி அவன் புகழைப் பரப்ப வேண்டும்.

சூர்யா இந்த படத்துக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். நிறைய பேருக்கு அந்த பரந்த மனசு வராது. சுருதிஹாசன், சுபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சுபாவையும், சுருதியையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை," என்றார்.

சூர்யா

படத்தின் நாயகன் சூர்யா பேசுகையில், "போதி தர்மனை, பாதி உலகம் கடவுளாக கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போதி தர்மனை பற்றிய தடயங்களே அழிக்கப்பட்டு விட்டன. அவருடைய புகழ் மறக்கடிக்கப்பட்டு விட்டதால், யாரும் இதுபற்றி படம் எடுக்கவில்லை.

அவரை பற்றிய புத்தகங்களை படித்துவிட்டு, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கமின்றி தவித்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, சில தற்காப்பு கலை பற்றிய பயிற்சி பெறுவதற்காக வியட்நாம் சென்றேன். அங்கே 80 வயது பாட்டி, சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார். மிரண்டு போனேன்.

அங்கே சர்க்கரை நோய் மருந்து விற்பதில்லை என்று கேள்விப்பட்டேன். அந்த மருந்து அங்கே தேவைப்படவில்லை.


படத்தில் எனக்கு ஸ்ருதிஹாசன்தான் ஜோடி என்றதும் வெடவெடத்துப் போனேன். அவர், கமல்ஹாசனின் மகள் என்பதால், பதற்றமாக இருந்தது. எனக்கு இணையான கதாபாத்திரம் அவருக்கு.

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப்பட உலகில் ஒரு முக்கிய இடம் த்துக்கொண்டிருக்கிறது,'' என்றார்.

பேட்டியின்போது, பட அதிபர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

7-ஆம் அறிவு படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

1 Comments