அன்னா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி ஜனநாதன் பரபரப்பு கருத்து

அரசியல், சினிமா இரண்டிலுமே தெளிவான பார்வை கொண்டவர் டைரக்டர் ஜனநாதன். அவரது சினிமாக்களில் பொதுவுடைமை கருத்துக்கள் நிறையவே இருக்கும். சமீபத்தில் நாட்டையே கலக்கிய அன்னா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி ஜனநாதன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். ஹசாரே போராட்டம் குறித்து பேட்டியன்றில் அவர் கூறியிருப்பதாவது:

ஹசாரேவின் போராட்டத்தில் நல்லெண்ணத்தின் கோஷம் இருந்தது. ஆனால், ஆழமான அரசியல் பார்வைகள் இல்லை. ஹசாரே எம்.பிக்களை விமர்சிக்கிறாரே தவிர, பார்லிமென்ட்டை உருவாக்கும் தேர்தல் முறையை விமர்சிக்கவில்லை. உண்மையில் விமர்சிக்கப்பட வேண்டியது பார்லிமென்ட் அமைப்புதான். இங்கு இருக்கும் தேர்தல் முறையிலேயே ஏராளமான கோளாறுகள் உள்ளன.

1961ல் அண்ணாத்துரை தலைமையில் நடந்த கோவை தி.மு.க. தேர்தல் மாநாட்டில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும், என்று தீர்மானம் போட்டார்கள். அந்தத் தீர்மானத்துக்கான தேவை இன்றும் இருக்கிறது. தோழர் லெனின், சுவிட்சர்லாந்து நாட்டு நாடாளுமன்ற முறை முதலாளித்துவ ஜனநாயகத்தின் உச்சம் என்றார். அங்கு பெரும்பான்மையான சட்டங்கள் பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படுவது இல்லை. மக்களின் பொது வாக்கெடுப்பு மூலம்தான் நிறைவேற்றப்படுகின்றன. அங்கு மக்களிடம்தான் இறையாண்மை இருக்குமே தவிர, ஆளும் அரசிடம் இல்லை.

அமீரும், சீமானும் இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக ஆட்சியாளர்கள் சொன்னார்கள். உண்மையில் அவர்கள் வாதப்படி அண்ணா ஹஸாரேதான் இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார். தான் உருவாக்கிய கமிட்டியிலேயே தென்னிந்தியர்களுக்கும் தலித்துகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்காத ஹஸாரேவுக்கு மக்கள் பிரதிநிதித்துவம்பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அம்பேத்கர் பற்றி இவர் பேசலாமா?

தீப்பந்தம் ஏந்த வேண்டியவர்களை மெழுகுவத்தி ஏந்த வைத்ததுதான் ஹசாரே செய்த சாதனை. அது மத்தியதர வர்க்கம் கொண்டாடிய தேசிய தீபாவளி. இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதற்கு என்று கணிசமான தொகையை தங்கள் பட்ஜெட்டில் ஒதுக்குகின்றன. அந்தத் தொகையை குறைக்க வேண்டும் அல்லது இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட சினிமாதான் அண்ணா ஹஸாரேவின் போராட்டம் என்று கூறியிருக்கிறார்.

Post a Comment

0 Comments