தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு

தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இந்திய தொழில், வர்த்தக சபைகள் கூட்டமைப்பின் (ஃபிக்கி) தேசிய செயற்குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"தமிழகத்துக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று உறுதியாக நம்புகிறேன். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களை எதிர்கொண்டு அனைத்துத் தரப்பினரும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட முடியும் என்று எனது அரசு நம்புகிறது.

12-வது நிதிக்குழு (2012-2017) 9 முதல் 9.5 சதவீத வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளது. தேசிய அளவிலான இந்த வளர்ச்சி விகிதத்தை விட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும். தேசத்துக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் இருக்க முடியும்.

எனது ஆட்சிக்காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சி 13.3 சதவீதம் என்ற அளவுக்கு சிறப்பாக இருந்தாலும், அதற்கடுத்த ஆண்டுகளில் அது குறைந்துவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதலீடு செய்ய ஏற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. அதே வேளையில், இங்குள்ள பிரச்னைகளையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. தொழில்துறையினரைக் கவலையடைச் செய்யும் குறுகிய, நீண்ட காலப் பிரச்னைகள் இங்குள்ளன. இதுகுறித்து விழிப்போடு இருந்து, அதைத் தீர்க்க அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது.

மின்சாரம், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லாதது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. இந்தத் துறைகளில் அதிக முதலீடு தேவை. சாலைகள், மின்சாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு - தனியார் ஒத்துழைப்பை வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு வாரியம் என்ற அமைப்பும் எனது தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு. இதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியாக உள்ள 2025 - தொலைநோக்குத் திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படும். மின்வெட்டு காரணமாக தொழில் நிறுவனங்கள் கவலை கொண்டுள்ளது எனக்குத் தெரியும். விரைவில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு நீங்கி, தமிழகம் மிகை மின் மாநிலமாக மாறும். அடுத்த 5 ஆண்களில் 23 ஆயிரத்து 140 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய தமிழகத்தில் அதிக வாய்ப்பு இருக்கிறது. 2011 -ம் ஆண்டுக்கான புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதில் ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில்சார்ந்த கொள்கைகள் இடம்பெறும்.

Post a Comment

1 Comments

அப்படி சொன்னதற்காக அம்மாவை பாராட்டலாம்