பிரபல ஆங்கில மஹாகவியும், புகழ்பெற்ற நாடகாசிரியருமான, வில்லியம் ஷேக்ஸ்பியர் , அவர் எழுதியதாகக் கருதப்படும் நாடகங்களை உண்மையில் எழுதியவர் அல்ல என்று கூறும் கருவைத் தாங்கி வரும் புதிய ஹாலிவுட் திரைப்படமான, "அனானிமஸ்" என்ற படத்துக்கு எதிராக, கல்வியாளர்களும் நடிகர்களும் ஒரு பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்
இது ஒரு திரைப்படம்தான் என்றாலும், இங்கிலாந்தின் ஸ்ட்ராட்போர்ட் நகரில் பிறந்த வில்லியம் ஷேக்ஸ்பியர்தான் உண்மையில் இந்த நாடகங்களை எழுதியவரா என்று கேள்விகளை எழுப்பி வருவோரை இது மேலும் ஊக்கப்படுத்தும் என்று சிலர் அஞ்சுகின்றனர்.
இந்த “ அனானிமஸ்” (அநாமதேயம்) என்ற திரைப்படம் , ஒக்ஸ்போர்ட் பிரபுவான, எட்வர்ட் தெ வேர் என்பவரைப் பற்றியது.
எட்வர்ட் தெ வேர் என்ற இவர்தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உண்மையில் எழுதியவர் என்று சிலர் நம்புகின்றனர்.
இந்த கருத்தை ஒரு முட்டாள்தனமான கருத்து,தெய்வநிந்தனைக்கு சமம், அதீத கற்பனை என்று ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தை நிர்வகித்து வரும் அறக்கட்டளை கூறுகிறது.
ஆனால் இந்தக் கருத்துக்கு சில ஆதரவாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
மார்க் ரைலன்ஸ் , டெரக் ஜேக்கொபி போன்ற நடிகர்கள் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உண்மையில் யார் இயற்றினார்கள் என்பது குறித்து சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்கள்.
இதனால் ஷேக்ஸ்பியர் அறக்கட்டளை இந்த சந்தேகங்களை எழுப்புபவர்களுக்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் கரு ஒன்றும் தன்னை கலக்கமடையச் செய்யவில்லை என்று கூறும் பேராசிரியர் ஸ்டான்லி வெல்ஸ் , ஆனால் இரண்டு பல்கலைக்கழகங்கள் ஷேக்ஸ்பியர்தான் இந்த நாடகங்களை எழுதியவர் என்பதை கேள்விக்குள்ளாக்கும் பாடங்களை நடத்துவதுதான் தன்னை அதிகம் கவலை கொள்ளச் செய்திருக்கிறது என்றார்.
இந்த மாதிரி புரளி கிளப்புவர்களை நேரடியாக எதிர்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறுகிறார்.
0 Comments