மன்மோகன் சிங்கம் video -தடை-காங்கிரஸ்அஜய் தேவ்கன் நடித்த சிங்கம் படத்தின் காட்சிகளை வைத்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை கேலியாக சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழில் சூர்யா நடித்து வெளியான படம் சிங்கம். இப்படத்தை அதே தலைப்பில் இந்தியில் அஜய் தேவ்கன், காஜல் அகர்வாலை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இந்தியில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் சில காட்சிகளை எடுத்து அதில் கிராபிக்ஸ் வேலை செய்து மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியின் உருவங்களை இணைத்து கேலிச் சித்திரமாக மாற்றி யூடியூப் உள்ளிட்டவற்றில் வெளியிட்டுள்ளனர். மன்மோகன் சிங்கம் என்ற தலைப்பில் இந்த வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அதில் அஜய் தேவ்கன் முகத்திற்குப் பதில் பிரதமரின் முகத்தை இணைத்து அவர் அதிரடியாக சண்டை போடுவது போலவும், தெரு விளக்கைப் பிடுங்கி வில்லனை அடிப்பது போலவும், ஆக்ரோஷமாக ஓடுவது போலவும் காட்சிகளை அமைத்துள்ளனர்.

ஒரு காட்சியில் பிரதமருக்குப் பின்புறம் சோனியா காந்தி நிற்பது போலவும் காட்சியமைத்துள்ளனர். இது காங்கிரஸார் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை வீடியோ பிரதமரையும், சோனியா காந்தியையும் களங்கப்படுத்துவதாக உள்ளது. எனவே இதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக யூடியூபுக்கும் காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

No comments: