ஸ்கூட்டரில் எத்தனை பேர் போகலாம் என்றவுடன் இரண்டு அல்லது அதிகப்பட்சம் மூன்று பேர் என்பதுதான் நம் பதிலாக இருக்கும். ஆனால், லண்டனை சேர்ந்த பிளம்பர் ஒருவர் உலகின் மிக நீளமான ஸ்கூட்டரை வடிவமைத்து அதில் 23 பேரை அமர வைத்து ஓட்டிக்காட்டி அசத்தியுள்ளார்.72 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீளமான இந்த ஸ்கூட்டரை அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கி அதை ஒரு கிமீ தூரம் ஓட்டிக்காட்டி அவர் சாதனை புரிந்துள்ளார்.
லண்டன் லிங்கன்ஷையர் பகுதியை சேர்ந்தவர் கோலின். பிளம்பர் வேலை பார்த்து வரும் இவருக்கு சிறு வயதிலிருந்து எதையாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற உணர்வு தீ உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.அவருக்குள் பற்றி எரிந்த உணர்வு தீக்கு தீணி போடும் விதமாக ஒரு புது ஐடியா கிடைத்தது. அதாவது தனக்கு தெரிந்த பிளம்பர் தொழிலை வைத்து உலகின் மிக நீளமான ஸ்கூட்டரை உருவாக்கி சாதனை படைக்க முடிவு செய்தார்.இதற்காக, தனது 125 ஸ்கூட்டரின் பின்பக்கத்தை பாதி அளவுக்கு வெட்டி எடுத்து, 72 அடி நீளம் கொண்ட அலுமினிய சேஸிசுடன் இணைத்தார். பிறகென்னெ, அவரது அயராத உழைப்பின் மூலம் உலகின் மிக நீளமான ஸ்கூட்டர் ரெடி.ஆனால், அதை ஓட்டிக்காட்டினால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறமுடியும். ஸ்கூட்டர் என்பதையும் ஒத்துக்கொள்வார்கள்.
எனவே, தனது நீளமான... ஸ்கூட்டரை 100 மீட்டர் தூரம் ஓட்டி சாதனை படைக்க முடிவு செய்தார். இதற்காக, பலரை அணுகியபோது பலர் தயங்கினர். கீழே விழுந்துவிடுவோம் என்ற பயம்தான். இருப்பினும், அவரது சாதனை முயற்சியை மனமுவந்து பாராட்டிய 23 பேர் நம்பிக்கையுடன் அவரது ஸ்கூட்டரில் ஏறி உட்கார்ந்தனர்.மெல்ல மெல்ல சாதனை இலக்கை நோக்கி ஸ்கூட்டர் நகர துவங்கியது. என்ன ஆச்சரியம்! இலக்கு வைத்ததைவிட 10 மடங்கு கூடுதலாக, அதாவது ஒரு கிமீ தூரம் வரை அந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்வையாளர்களை அசத்தினார் கோலின். வெறும் 9 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட 125 சிசி எஞ்சின் இத்தனை பேரையும் திக்கி திணறாமல் இழுத்து வந்ததும் இந்த சாதனையில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.மேலும், இந்த சாதனையை வீடியோவாக பதிவு செய்து கின்னஸ் புத்தகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். விரைவில் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments