தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன் பேட்டி

by 4:19 PM 4 comments


கேள்வி:- எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

பதில்:- முதலில் எங்களுக்காக போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். மக்களின் ஒருமித்த கை கோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது.

19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்.

கேள்வி:- தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து:-

பதில்:- அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் எங்களுக்காக போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனித நேயமும் ஒன்று சேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத் தெரியும்.

கேள்வி:- தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்:- மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல 20.7.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்.

தயவு செய்து தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுங்கள் என அந்த கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.

மனசாட்சியின் கண்ணீர் குரலாக சொல்கிறேன். எங்களுக்கு தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும்.

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கி விட்டதாக நினைக்கிறீர்களா?

பதில்:- 99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் என்னைப் பார்க்க வந்தார். வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார். தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன் எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்களுக்காக போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்ப தோன்றுகிறது. ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒரு வேளை மரணம் எங்களை வென்று விட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது தூக்குக்கு பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

4 comments:

karlmarx said...

படித்தால் யாரையும் சிந்திக்க வைக்கும் உணர்ச்சி உயிரோட்டமாக மனதை தாக்கும் சொற்கள் என்னால் தூங்க முடியாது என்று தோன்றுகிறது.

karurkirukkan said...

????????????

மாய உலகம் said...

தங்களது இந்த பதிவின் லிங்கை எனது பதிவில் இட்டுள்ளேன்

http://maayaulagam-4u.blogspot.com/2011/08/blog-post_3522.html

karurkirukkan said...

நன்றி மாய உலகம்