ரஜினி நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள்பெங்களூர் கவிபுரத்தில் கங்காதீஸ்வரா சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ளது அந்த அரசு உதவி பெறும் மாதிரி தொடக்கப் பள்ளி. இங்குதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து படித்தார். அவரோடு இந்தப் பள்ளியில் படித்த பல நண்பர்கள் இன்று வெவ்வேறு துறைகளில் உள்ளனர். சிலர் ரஜினியை நீண்ட வருடங்களாக பார்க்கக் கூட இல்லை. சிலர் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் ரஜினியுடன் படித்த அந்த நாட்களின் நினைவுகளை பொக்கிஷமாய் சுமந்து வருபவர்கள்.

ரஜினியுடன் பணியாற்றி, அவரது சினிமா வாழ்க்கைக்கே முதல் சுழி போட்ட அவரது உயிர் நண்பர் ராஜ் பகதூர் தலைமையில் ரஜினியின் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்துள்ளனர். ரஜினி படித்த இந்த கவிபுரம் அரசு உதவிபெறும் மாதிரி தொடக்கப் பள்ளியை அனைத்துவிதங்களிலும் முன் மாதிரிப் பள்ளியாக உயர்த்த இந்த நண்பர்களும் சில ரஜினி ரசிகர்களும் கரம் கோர்த்துள்ளனர்.பள்ளிக் கட்டடங்களை சீரமைத்தல், கம்ப்யூட்டர் பற்றி பெரிதாக தெரியாத அந்தப் பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வாங்கித் தருதல் என பெரிய அளவில் இப்பள்ளியைப் புணரமைக்கிறார்கள்.

பள்ளி சீரமைப்பு பணிகளை நேற்று கவிபுரம் மாதிரிப் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் முறைப்படி தொடங்கி வைத்தார்."வெவ்வேறு இடங்கள், துறைகளில் உள்ள ரஜினியின் நண்பர்களும் அவரது ரசிகர்களும் மேற்கொண்டுள்ள ஒரு அரிய முயற்சி இது. கண்ணுக்கு தெரியாமல், விளம்பரமில்லாமல் ரஜினி செய்யும் பல்வேறு நற்பணிகளை, உதவிகளைச் சிறப்பிக்கும் பொருட்டு, அவரது நண்பர்கள் இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர். இந்தப் பள்ளி பெங்களூரின் முதன்மைப் பள்ளியாகத் திகழும்," என்றார் ராஜ்பகதூர். இதில் ரஜினியின் பங்களிப்பு என்ன என்பது குறித்து ராஜ் பகதூரிடம் கேட்டபோது, அதுகுறித்து எதுவும் இப்போது சொல்வதற்கில்லை என்றார் அவர்.

No comments: