ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு, சட்டத்தைப் பற்றி தெரியவில்லை


போலீஸ் துறையில் எந்த தலையீடும் இருக்கக் கூடாது. ஆனால், ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு, சட்டத்தைப் பற்றி தெரியவில்லை,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரை: சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் போது, அங்கு பொருளாதார வளர்ச்சிக்கு இடமிருக்காது. முந்தைய தி.மு.க., ஆட்சியில் சமூக விரோதிகளைக் கண்டு காவலர்கள் அஞ்சிய நிலைமை, தற்போது மாறி, காவலர்களைக் கண்டு சமூக விரோதிகள் அஞ்சும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்று, சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. காவலர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்று எவரிடமிருந்தும் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் தங்கள் பணிகளை நியாயமாகவும், நேர்மையாகவும் மேற்கொண்டால் தான், சட்டத்தின் மீதும், அரசின் மீதும் மக்கள் நம்பிக்கை வைப்பர். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்த சபையில் ஒரு முறை பேசும் போது, "காவல் துறை என்பது பொதுவான துறை தான். அது, நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது, எங்களுக்கு கட்டுப்பட்ட துறை. நீங்கள் ஆட்சியில் இருந்தால், உங்களுக்கு கட்டுப்பட்ட துறை' என்று கூறியுள்ளார்.காவல் துறை, ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்கள் சொற்படி எல்லாம் கேட்கிற துறை அல்ல. ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்கு ஏற்றவாறு, கொள்கைகளோ, கோட்பாடுகளோ, நோக்கங்களோ மாறக்கூடியது அல்ல.
அது, நீதிக்கும், நேர்மைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்ட துறை. காவல் துறையின் பணிகளில் குறுக்கீடு செய்ய, யாருக்கும் அதிகாரம் இல்லை. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் கூட, அதன் செயல்பாடுகளில் தலையிட முடியாது. சட்டத்துக்கு உட்பட்ட முறையில் தான், அறிவுரை வழங்க இயலும்.
அவ்வாறு இல்லாமல், குற்றம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்யும் போது, அவ்வாறு கைது செய்யப்பட்டவரை விட்டு விட வேண்டுமென, உத்தரவிடவோ, அறிவுரை வழங்கவோ எவராலும் முடியாது.

சமீபத்தில் ஒரு பேட்டியில், "சுவிஸ் வங்கியில் உங்களுக்கு பணம் இருப்பதாக அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிட ஏதாவது பின்னணி இருக்கிறதா' என்று கேள்வி கேட்டபோது, அதற்கு பதிலளித்த கருணாநிதி, "இந்தப் பத்திரிகையின் ஆசிரியரோ அல்லது உரிமையாளரோ, நான் ஆட்சியில் இருந்தபோது, அவரை காவல் துறையினர் கைது செய்தபோது, நான் உடனே தலையிட்டு, பத்திரிகைகாரர்களை எல்லாம் கைது செய்ய வேண்டாம் என உத்தரவிட்டு, அவரை விடுதலை செய்தேன்' என்று கூறியுள்ளார். இது உண்மையாக இருக்குமானால், காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நபரை, வாய்மொழியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிடுவது, காவல் துறையின் நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வது தான். ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஆனால், கருணாநிதி இன்று வரை சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதும் அவருக்குத் தெரியவில்லை. இத்தனை ஆண்டு காலம், வெறும், மனோகரா பாணியில் வசனத்தை பேசிக் கொண்டு காலத்தை ஓட்டியுள்ளார் என்று தெரிகிறது. முந்தைய அரசு அமைத்த காவல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க மறுத்து, கருணாநிதி ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் காவல் நிலையங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது, நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும், அதை நடைமுறைப்படுத்த இயலாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படி ஒரு அரசாணையை வெளியிடுவதே, சட்ட விரோத செயல் என்று கூட தெரியாத ஒருவர், முதல்வராக இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளார். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Post a Comment

0 Comments