படிக்க உதவி செய்யும் தமிழகத்தின் புது டீம்

சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, படிப்பதற்கு வசதியில்லாத, ஏழை மாணவர்களை தத்தெடுத்து படிக்க வைக்கின்றனர்.கல்வி, வியாபாரப் பொருளாகிவிட்ட இன்றைய நிலையில், தங்கள் குழந்தைகளையே படிக்க வைப்பதற்கு முடியாமல் பெற்றோர்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, கல்வியின் மூலம் உயர்வடைந்த முதல் தலைமுறை மாணவர்கள், அடுத்த தலைமுறைமுறைக்கு கல்வி கொடுப்பது, இன்றைய இளைய தலைமுறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.சென்னை மாநிலக்கல்லூரியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் ஒன்றிணைந்து, 2005ம் ஆண்டில் ஆரம்பித்தது தான் "வாழை'. வாழையடி வாழையாக இத்தொண்டு, அடுத்தடுத்த மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக, இப்பெயரை சூட்டியுள்ளனர்.

""எங்கள் கல்லூரி விடுதியான விக்டோரியா விடுதியில் தங்கி இருக்கும் போது, பல்வேறு வகையான மாணவர்களை சந்தித்தோம். நிறைய மாணவர்கள் விடுதிக் கட்டணம் கட்டுவதற்கும்,தேர்வுக் கட்டணம் கட்டுவதற்கும் பல்வேறு கஷ்டங்கள் படுவதை நேரில் பார்த்த பிறகு, மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்க, இந்த அமைப்பை ஆரம்பித்தோம்'' என்கிறார், வாழை அமைப்பாளர்களில் ஒருவரான அமுதரசன்.

தமிழகத்தில் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் தர்மபுரி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள முதல்தலைமுறை மாணவர்களை தத்தெடுத்து, கல்வி வழங்கி வருகின்றனர்.இம்மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களும், கல்வியில் இடைநிற்றலும், தற்கொலைகளும் அதிக அளவில் இருப்பதால் தான், இங்குள்ள மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் அதிக செலவுகள் இல்லாததால், கல்வியில் மட்டும் வழிகாட்டுகின்றனர்.

வாழை உறுப்பினர்கள், ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டியாக இருப்பர். மாணவியருக்கு பெண் உறுப்பினர்கள் வழிகாட்டியாக இருப்பர். இவர்கள், தாங்கள் தத்தெடுத்துள்ள மாணவர்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல செயல்படுவார்கள்.மாதத்திற்கு இரண்டு முறை, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், இரண்டு நாட்கள் தங்கி, மாணவர்களோடு உறவாடுகின்றனர். அப்பொழுது அவர்களின் படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்துவதற்கும், விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு போட்டிகளை நடத்துகின்றனர்.

மேலும், இரண்டு நாள் முகாமில் மாணவர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்துவதற்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களை அழைத்து, மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்கின்றனர்.
"தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடக்கும். அப்படி ஒரு பகுதியில் கட்டாய திருமணத்திற்கு உடன்படாத பெண், தற்கொலை செய்து கொண்டாள். அதே தெருவில், அன்றைக்கு ஒரு மாணவி பூப்பெய்தி இருந்தாள்.

உடனடியாக அவளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதை அறிந்த நாங்கள், அவளுயை பெற்றோரிடம் பேசி திருமணத்தை நிறுத்தி, "வாழை'யில் இணைத்தோம். இன்று அவள் சென்னையில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் படிக்கிறாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது' என பூரிப்புடன் சொல்கிற பிரவீனா, தனியார் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கிறார்."வாழை' அமைப்பின் மூலமாக இதுவரை 300க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பெற்றிருக்கின்றனர். கணிசமான அளவில் குழந்தைத்திருமணமும், பள்ளி இடைநிற்றலும் குறைந்திருக்கிறது.

""இப்ப எங்களோட வழிகாட்டுதலில் உள்ள மாணவியரை, பெண்கேட்டு வந்தால் கூட, பெற்றோர்கள் எங்களிடம் தான் ஆலோசனை கேட்டு முடிவெடுக்கின்றனர். இப்பொழுது அப்பகுதி மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வு வந்திருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால், அப்பகுதியில் நல்ல மாற்றம் ஏற்படும்'' என்கிறார் வழிகாட்டிகளில் ஒருவரான திவ்யா.

சென்னையில் 80 பேரும், பெங்களூரில் 60 பேரும் வழிகாட்டிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனங்களில் முழுநேர ஊழியர்களாக இருக்கின்றனர். வேலையில் பல பிரச்னைகள் இருந்தபோதிலும், ஓய்வெடுக்க வேண்டிய நேரங்களில், தங்கள் பொன்னான நேரத்தை மாணவர்களின் எதிர்காலத்திற்கு செலவிடுகின்றனர்.

""கிடைக்கிற விடுமுறையை நாங்கள் பயன்படுத்திக் கொண்டால், அது தனிமனிதர்களுக்குத் தான் பயன்படும். ஆனால் அந்த நேரத்தை மாணவர்களுக்காக செலவழிக்கும் போது, அது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் பயன்படுகிறது'' என்கிறார் "வாழை'யின் தலைவர் முகுந்தன்.

தொடர்ச்சியாக வழிகாட்டிகள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். பணி நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றாலோ, திருமணம் ஆனாலோ இவ்வமைப்பிலிருந்து விலகுபவர்கள், பொருளாதார ரீதியிலாக இவ்வமைப்பை ஆதரிக்கின்றனர். தங்களுக்கு தெரிந்தவர்களை, ஏழைக்குழந்தைகளின் படிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்களை "வாழை'யில் இணைக்கின்றனர்.இப்படியாக இரு தரப்பிற்கும், "வாழையடி வாழையாக' வளர்கிறது பலரையும் வாழ வைக்கும், "வாழை' அமைப்பு.

Post a Comment

1 Comments

அருமையான பதிவு நண்பரே,,,,பதிவை போஸ்ட் செய்யவும்.....