முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இந்திரா நகரில் வசிக்கும் மா. சங்கரசுப்பு அவர்களின் 8 மாத குழந்தை மதிலட்சுமியின் இதய அறுவை சிகிச்சைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 62 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இந்திரா நகரில் வசிக்கும் மா. சங்கரசுப்பு தான் ஏழ்மை நிலையில் கூலி வேலை செய்து சிரமத்துடன் வாழ்ந்து வருவதாகவும், அவரது 8 மாத குழந்தை மதிலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டபோது, குழந்தைக்கு அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று மருத்துவர் அறிவுறுத்தினார் என்றும், அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள தங்களது குடும்பத்தின் வறிய நிலையை கருத்தில் கொண்டு நிதியுதவி வழங்கி, குழந்தையை காப்பாற்றிட வேண்டுமென ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்த ஜெயலலிதா, குழந்தை மதிலட்சுமியின் இதய அறுவை சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள ஏதுவாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 62 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை இன்று தலைமைச் செயலகத்தில் குழந்தையின் தந்தை மா. சங்கரசுப்புவிடம் நேரில் வழங்கி குழந்தை மதிலட்சுமி மருத்துவ சிகிச்சைப் பெற்று விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், எல்லா நலன்களையும் பெறவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
0 Comments