ரகுவரன் நினைவாக விரைவில் இசை ஆல்பம்


திரைப்பட இயக்குனராக போராடும் உதவி இயக்குனர்களுக்கு 'எப்படியாவது கமல் கூட ஒரு படம் பண்ணிடணும்.. ரஜினி கூட ஒரு படம் பண்ணிடணும் ' என்பது போல் 'ரகுவரன் சாருக்கு ஒரு நல்ல ரோல் இருக்கு.. அவரை நம்ம படத்துல எப்படியும் நடிக்க வெச்சிடணும்' என்பது ஒரு கனவாக இருந்தது.

வளரும் இயக்குனர்களும், பிரபல இயக்குனர்களும் உடன் பணியாற்ற விரும்பிய நடிகர் ரகுவரன். 'புரியாத புதிர்' படத்தில் அவர் பல விதங்களில் பேசிய ' I Know.. ' என்ற வசனம் வரவேற்பைப் பெற்றது.மிமிக்ரி செய்யும் கலைஞர்களின் செல்லக் குரல் ரகுவரனுடையது. "கதாநாயகர்கள் குரலில் பேசும்போது கிடைக்கும் அதே வரவேற்பை ரகுவரன் குரலில் பேசும்போதும் நாங்கள் பெறுவோம் " என்று பெருமிதத்துடன் கூறினார் ஒரு மிமிக்ரி கலைஞர்.ரஜினி, கமல் முதல் விஜய், அஜித், சூர்யாவைத் தொடர்ந்து தனுஷ் வரையில் பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்தவர் ரகுவரன்.
கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகன் என பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொண்ட ரகுவரனின் மறைவு திரையுலகில் பலருக்கு இழப்பு.

மறைந்த திரைக்கலைஞர் ரகுவரன் ஒரு அற்புதமான மியூசிக் கம்போஸர் என்பது வெளியே தெரியாத செய்தி. மிகுந்த இசைஞானம் உள்ள ரகுவரன் தமிழில் இசை ஆல்பம் ஒன்று கொண்டுவரவேண்டும் என விரும்பியவர். நல்ல கீ போர்டு பிளேயரான ரகுவரன், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மெட்டுக்களை உருவாக்கிக் கொண்டே இருப்பராம். இப்படி நூற்றுக்கும் அதிகமான மெட்டுக்களை அவரது கீ போர்டில் சேமித்து வைத்திருந்தாராம்.
ரகுவரன் இசையமைத்த மெட்டுகளில் இருந்து சிலவற்றை தேர்தெடுத்து ரகுவரனின் அம்மாவும் அவரது மனைவி ரோகிணியும் அவரது நினைவாக விரைவில் இசை ஆல்பம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். ரகுவரனின் குரலைப் போல அவர் இசையமைத்த மெட்டுகளும் பெரும் வரவேற்பை பெறும் என்று நம்புவோம். !

Post a Comment

0 Comments