ரஜினிகாந்த் பிறந்த நாள் - அண்ணன் சத்யநாரயணராவ்கெய்குவாட்


தீபாவளி,பொங்கல், மாதிரி டிசம்பர் 12ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு பண்டிகை திருநாள்... சூப்பர் ஸ்டார் பிறந்த அன்று -அண்ணன் சத்யநாரயணராவ்கெய்குவாட்

'' நல்லா ஞாபகம் இருக்கு... 1950, டிசம்பர் 11ம் தேதி ராத்திரி. அம்மா பிரசவ வலியால துடிக்குறாங்க அப்படியும், இப்படியும் புரண்டவங்க கொஞ்ச நேரத்துல கண்ணசந்து தூங்கிட்டாங்க. அப்போ அவங்க கனவுல மகான்கள் வர்றாங்க... கடவுள், 'கவலைப்படாதே... உனக்கு நல்லபடியா மகன் பிறப்பா..' என்று ஆசீர்வாதம் பண்றார். மறுநாள் காலை மறுபடியும் பிரசவவலி. அப்போ எனக்கு 19வயசு... அப்பா ராமோஜிராவ்கெய்குவாட் போலீஸ்காரர். கார்ல கூப்பிட்டு போகணும்னு ஆசை... ஆனா அதுக்கு கையில காசு, பணம் இல்லை. தனியார் ஆஸ்பத்திரியில சேர்க்கிற அளவுக்கு எங்க குடும்பத்துல அப்படி ஒண்ணும் வசதி கிடையாது. பெங்களூர்ல இருக்குற வாணிவிலாஸ். அரசு மருத்துவனைக்கு அம்மாவை நானும், அப்பாவும் அழைச்சிட்டு போனோம்.

காலைல 11 மணிக்கு அம்மாவுக்கு வலி வந்துடுச்சு... 12.12.1950 மதியம் 12 மணிக்கு பொறந்தார் ரஜினி.. நான், நாகேஸ்வரராவ், சகோதரினு இருந்த எங்க குடும்பத்தோட கடைக்குட்டி ரஜினி...அம்மா கண்விழிச்சு பார்க்குறாங்க... பக்கத்துல என் தம்பி சிணுங்கலோட... மலங்க... மலங்க முழிச்சு பார்க்குறான். அப்பத்தான் நான் ஆரம்பத்துல சொன்ன கனவு என்கிட்டேயும், அப்பாவிடமும் அம்மா சொன்னாங்க... அம்மாவை பார்க்கறதுக்கும், தம்பி பொறந்ததை பார்க்கறதுக்கு சொந்த பந்தம், சாதி சனம் எதுவுமே வரலை.. என்னையும், அப்பாவையும் தவிர அம்மாவுக்கு ஆறுதலா யாருமே இல்லை..

ஒண்டியா படத்துக்கிட்டு என்னை உத்து உத்து பார்த்துட்டு பொக்கை வாய் காட்டி சிரிச்சான்... இன்னிக்கு டிசம்பர் 12ம் தேதி ரஜினி பொறந்த நாள் அன்னிக்கு உலகமே திருநாளா கொண்டாடுது... ஆனா அவன் பொங்களுரூ அரசு மருத்துவமனையில பொறந்தப்ப ஒருத்திரும் வரலை... அன்னிக்கும் சரி... இன்னைக்கும் சரி ஏழைக்கு ஏதுங்க நாதி...
11 வயது பிரைமரி ஸ்கூலு அஞ்சாங்கிளாஸ் படிக்கிறான். அப்பத்தான் அம்மா இறந்துட்டாங்க. எங்க வீட்டு கடைக்குட்டி ரஜினி, அப்பவுமே துறுதுறுன்னு இருப்பான் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோல அம்மான்னா ரஜினிக்கு உசுரு... ரஜினிக்கு உயிர் கொடுத்த அம்மா உடம்பு உயிர் இல்லாம இருந்துச்சு... ஸ்கூல் விட்டு வந்த ரஜினி அப்படியே அம்மா முகத்தை பார்த்து உறைஞ்சு போயிட்டான்.. எப்பவும் சுறுசுறுப்பா வேகமா இருக்கிறவன் அம்மா இறந்த சோகத்துல கொஞ்சநாள் அமைதியாகிட்டான்.

சென்னைக்கு வந்து சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சார். அப்பாவை அடிக்கடி சென்னைக்கு அழைச்சுட்டு போய் பாசமா தன்னோட தங்க வச்சுக்குவார். ரஜினிக்கு 30வயது இருக்கும்... அப்பா ராமோஜிராவ் இறந்துட்டார். 'அபூர்வராகங்கள்' 'மூன்று முடிச்சு' படங்கள்ல தம்பி நடிப்பை பார்த்து ரசிச்சார். என்ன ஒண்ணு... வில்லனா நடிச்சத பார்த்தவர், பிற்காலத்துல ... ஹீரோவா... இப்போ சூப்பர் ஸ்டாரா உசந்து நிக்கறதை பார்க்காம போயிட்டார்...
எந்த சூழ்நிலை பொறந்தோம்னு அவருக்கு நல்லாத் தெரியும்... இப்பக்கூட ஒவ்வொரு டிசம்பர் 12ம் தேதி அன்னிக்கு தன்னோட பழைய ஞாபகத்துல மூழ்கிடுவார்... அதனால் தான் முன்னாடி எல்லாம் 'என் பிறந்த நாள் அன்று வெளியூரில் இருப்பதால் ரசிகர்கள் என்னைத்தேடி வரவேண்டாம்' என்று அறிக்கையை பேப்பர்ல கொடுத்து வந்தார்.

கடைக்குட்டி ரஜினிமேல் எங்கம்மாவுக்கு ரொம்ப பிரியம். நல்ல உத்தியோகத்தில் கை நிறை சம்பாதிக்கனும் என்பது அம்மாவோட ஆசை.. இன்னிக்கி என் தம்பி சூப்பர் ஸ்டாரா இருக்கற காட்சியை பார்க்கரத்துக்கு எங்கம்மா உயிரோட இல்லையேனு நினைக்கும் போது கண் கலங்குது... மனசு பதறுது...
ரசிகருங்க எல்லாம் ரஜினி அரசியலுக்கு வரனும்னு ஆசைப்படுறாங்க... அவருக்கு என்னவோ அதிலே அவ்வளவு இஷ்டம் இல்லை.. சாதாரண நடிகனா நாலு படத்துல தலையை காட்டணும்னுதான் சினிமாவுல நடிக்க சென்னைக்கு வந்தார்.. இப்போ பெரிய நடிகரா உசந்து நிக்கிறான்.. எல்லாத்துக்கும் ஆண்டவனோட ஆசீர் வாதம் தான் காரணம். அதுபோல அரசியலுக்கு வரணும்னு அவர் தலையில ஆண்டவன் எழுதியிருந்தா அதை யாரால தடுக்க முடியும்...'' என்று மனமுருகினார்..

courtesy.vikatan

Post a Comment

0 Comments