3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை; ஐகோர்ட்டு உத்தரவு


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வரும் 9-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் அவர்களைத் தூக்கில் போட தமிழக சிறைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில் அவர்கள் மூவரும் 10க்கு 10 பரப்பளவுள்ள தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருக்கும் தலா 20 பேர் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த நிலையில் தூக்கு கயிற்றில் இருந்து அவர்களை மீட்க பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் இன உணர்வாளர்களும் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் 3 பேரின்தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள், சென்னை ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை நீதிபதி என்.பால் வசந்தகுமார் ஏற்றுக் கொண்டார். அவசர சூழல் கருதி மனுக்கள் மீது உடனடியாக விசாரணை தொடங்கவும், அவர் ஒத்துக்கொண்டார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தங்கள் மனுவில், தங்களுக்கான தண்டனையை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை தொகுத்து கூறி உள்ளனர். 11 ஆண்டுகள் கழித்து கருணை மனு மீது முடிவு எடுத்ததும், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தண்டனை கொடுப்பதும் சட்ட விரோதமானது. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் தமிழ் இன ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் மூத்த வக்கீல்கள் ராம்ஜெத்மலானி மோகித் சவுத்திரி, காலின் கான்சாலிஸ் ஆஜரானார்கள். தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி அவர்கள் வாதாடினார்கள். இடைக்கால தடை விதிக்க வேண்டியதற்கான காரணத்தையும், அதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள உட்பிரிவுகளையும் வக்கீல்கள் வாதத்தின் போது எடுத்து வைத்தனர்.

மூத்த வக்கீல்களின் கோரிக்கையை நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் இருவரும் ஏற்றுக் கொண்டனர். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை 8 வாரத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை தமிழ் உணர்வாளர்களுக்கு நிம்மதி பெருமூச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

2 Comments

போராட்டத்தின் முதல் வெற்றி நண்பா வாழ்த்துக்கள்
calmmen said…
நன்றி நண்பா
செங்கொடியின் தியாகம் வீண் போகாது என்று அனைவரும் நம்புவோம்