சன், "டிவி" ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது-பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

மோசடி வழக்கில், சன், "டிவி நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை போலீசார் கைது செய்ததற்கு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சங்கத்தின் முன் நேற்று ஒன்று கூடி பட்டாசு வெடித்து, உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். சன் பிக்சர்ஸ் நிர்வாக இயக்குனர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா, சன் குழுமத்தின் முக்கிய தளகர்த்தர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களை தயாரிப்பது, தயாரிப்பாளர்களிடம் இருந்து மற்ற படங்களை வாங்குவது, தயாரித்த படத்திற்கான வினியோக உரிமையை வினியோகஸ்தர்களுக்கு வழங்குவது என, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

"கந்தன் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் கொடுத்த மோசடி புகாரின்படி, நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கிய, சக்சேனாவை, கே.கே.நகர் போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். சக்சேனாவை 14 நாட்கள் கோர்ட் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை அடுத்து, புழல் சிறையில் தள்ளப்பட்டார். வழக்கு தொடர்பாக, சக்சேனாவை விசாரிக்க அனுமதி கேட்டு, போலீசார் கோர்ட்டை நாடியுள்ளனர்.

இந்நிலையில் சக்சேனா கைதை வரவேற்று, சென்னை ஆயிரம் விளக்கில் இயங்கி வரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் நேற்று பகல், 12 மணிக்கு வந்தனர். தயாரிப்பாளரை மோசடி செய்த, ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை கைது செய்த போலீசாருக்கு, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடிய தயாரிப்பாளர்கள், பத்தாயிரம் வாலா பட்டாசு வெடித்தும், அனைவருக்கும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அதன் பிறகு, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், 2006ம் ஆண்டு நடந்தபோது, அப்போதைய அரசின் செல்வாக்கில், அராஜக முறையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்கள் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டனர்.கடந்த ஐந்து ஆண்டு காலமாக, சன், "டிவி மற்றும் கலைஞர், "டிவி சேனல்களின் நலனில் அக்கறை செலுத்தி, சங்கத்தில் பதவி வகித்தவர்கள், பல முறைகேடுகள் செய்து, தயாரிப்பாளர்கள் நலனை காக்கத் தவறி, தமிழ்த் திரைப்படத் துறையை பல கோடி ரூபாய் நஷ்டத்திற்கு தள்ளிவிட்டனர்.தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மதுரையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், "நான் ஆட்சிக்கு வந்தால், தீய சக்திகளின் பிடியிலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையை மீட்டெடுப்பேன் என்று உறுதியளித்தார். இதை நிறைவேற்றும் வகையில், "கேபிள் "டிவி அரசுடமையாக்கப்படும். அந்தத் துறை, என் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அறிவித்து, அரசு கேபிள், "டிவி நிர்வாக இயக்குனராக ஜெயராமன் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பல தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்காமலும், வாங்கிய படங்களுக்கு சரியாக பணம் தராமலும், பல சிறிய படங்கள் வெளிவர முடியாத நிலையை உருவாக்கியும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களையும், வஞ்சித்த சன், "டிவி தலைமை நிர்வாகி சக்சேனாவை கைது செய்ததன் மூலம், தமிழ்த் திரையுலகம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

சேலத்தைச் சேர்ந்த டி.எஸ்.செல்வராஜ், "கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில், "தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தை வினியோகம் செய்தார். இப்படம் வினியோகம் செய்த வகையில், சன், "டிவி நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, 82 லட்சம் ரூபாயை தராமல் மோசடி செய்துவிட்டார் என்று சென்னை மாநகர போலீசில் செல்வராஜ் புகார் கொடுத்தார். இதன் பேரில், ஹன்ஸ்ராஜ் சக்சேனா போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். போலீசாரின் இந்நடவடிக்கையை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.சன், "டிவியால் பாதிக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள் பலரும், தற்போது அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டதால், அந்த "டிவிக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க துணிச்சலாக முன்வந்துள்ளனர். இதனால், அடாவடியாக நடந்து கொண்ட, "டிவி கடும் நடுக்கத்தில் உள்ளது.

இதனிடை‌யே சக்சேனா மீது ஏற்கனவே உள்ள பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் சின்னமலை, "செக்கர்ஸ் ஓட்டல் வழக்குகளின் விசாரணையும் தீவிரமாகும் என்று தெரிகிறது. சென்னை, கிண்டி- வேளச்சேரி ரோட்டை சேர்ந்த தர்மசேனன் எபினேசன் என்பவர் மனைவி சவுமித்ரி தர்மசேனன், 65. இவருக்கு சித்தார்த் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர். சித்தார்த் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி அதிகாலை, நீலாங்கரையில் உள்ள நண்பர் தருண் மல்கோத்ரா வீட்டிற்கு காரில் சென்றார். அங்கு, நின்றிருந்த காரை எடுக்கும் போது பிரச்னை ஏற்பட்டது. சித்தார்த் தாக்கப்பட்டார்.இது குறித்த பிரச்னையில், சவுமித்ரியை தொடர்பு கொண்ட ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரை மிரட்டியதுடன், இரவு 11 மணிக்கு ஆட்களை அனுப்பி தீபாவை தாக்கி, வீட்டையும் அடித்து நொறுக்கியதாக கிண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்படி கிண்டி போலீசார், ஹன்ஸ் ராஜ் சக்சேனா மற்றும் 30 பேர் மீது, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

சித்தார்த்தை தேடி வந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், சின்னமலை செக்கர்ஸ் ஓட்டலில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று, ஓட்டலை அடித்து நொறுக்கி, அங்கிருந்த பணத்தையும் அள்ளிச் சென்றனர்.ஓட்டலுக்கு மிரட்டலும் விடுத்ததால், துணை மேலாளர் சந்திரசேகர், கிண்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். இந்த இரண்டு வழக்குகளும் ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகின்றன.

ஏற்கனவே, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் கேட்ட போது,"வழக்கு விசாரணை முடிந்த பின், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், சக்சேனா தற்போது கைது செய்யப்பட்டிருப்பதால், நிலுவையில் உள்ள வழக்குகள் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. அவர் மீது வேறு வழக்குகள் இருக்கிறதா என்பதையும், போலீசார் ஆய்ந்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments