முதல்வர் ஜெயலலிதா 'டைம்ஸ் நவ்' செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டி

by 12:33 PM 0 comments


தேசிய அளவிலான கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கையில், 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எதுவும் நடக்கலாம் என தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் விசாரணைக்கு வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரக் கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

'டைம்ஸ் நவ்' செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த விரிவான பேட்டியில் இருந்து சில பகுதிகள்...சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி இந்த அளவுக்கு வெற்றி பெறும் என எதிர்பார்த்தீர்களா?

தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தேன். 200 இடங்களுக்கு குறையாமல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தேன். 203 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.


கடந்த ஆண்டு நவம்பரில் தேவைப்பட்டால் மத்தியில் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க தயார் என்று அறிவித்தீர்கள். அதை இப்போது எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?

கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் இருந்த அரசியல் சூழல் வேறுவிதமானது. அது அந்த சமயத்துக்கு மட்டும் தெரிவித்த ஆதரவு. 2ஜி விவகாரத்தின் காரணமாக, மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினால், மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னேன். கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் அந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகுகூட, திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.

அப்போது நான் ஆதரவு அளிக்கிறேன் என்று சொன்னேன். அதனை பரிசீலிக்காதது ஏன் என்று காங்கிரஸிடம் தான் கேட்க வேண்டும். இப்போது காட்சிகள் அனைத்தும் மாறிவிட்டன. இதன்பிறகு அதுபோன்ற சூழலுக்கே இடமில்லை.

மாநில கட்சிகளுடன் கூட்டணி அரசியல் என்பது தற்போதைய சூழலில் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது என கருதுகிறீர்களா?

இதை அனுமானிப்பதற்கு நான் ஜோதிடர் இல்லை. ஆனால், தனிப்பெரும்பான்மை ஆட்சி என்ற காலம் முடிந்துவிட்டது. எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சி தான் நீடிக்கும். தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் முழுமையான திறனில்லை என்றே நினைக்கிறேன்.

மத்தியில் 2014-க்கு முன்பு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதா? உங்களது நிலைப்பாடு...

நான் முதல்வராக பதவியேற்று ஒன்றரை மாதங்கள் தான் ஆகின்றன. எதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

எந்தநேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இதுதான் நடக்கும் சொல்ல முடியாது. அதேவேளையில், நாம் எதற்கும் தயாராகவே இருக்க வேண்டும். இதுபற்றி விவரிக்க விரும்பவில்லை.

உங்கள் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அண்மையில் உங்களை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். பிஜேபியின் முக்கியத் தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக பேச்சு எழுகிறது. பிஜேபியுடன் இணைந்து செயலாற்றுவதில் உங்களுக்கு தயக்கம் இல்லை என்றே தெரிகிறது...

கடந்த 2002-ல் மோடி பதவியேற்பில் நான் கலந்துகொண்டேன். அதையொட்டியே அவரும் எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமல்ல.. டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் எனது நெருங்கிய நண்பர் தான். ரவிஷங்கர் பிரசாத்தும் எனது நண்பராக இருக்கிறார்.

நரேந்திர மோடியும், சுஷ்மா ஸ்வராஜும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு உங்களது ஆதரவு என்பது மிகவும் அவசியம் என்ற கருத்தும் உள்ளது...

எல்லா கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதைப் போல் தான் பிஜேபியுலும். காங்கிரஸ் கட்சியில் கூட நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைச் சந்தித்தோ அல்லது தொலைபேசியிலோ பேசுகிறார்கள்.

நரேந்திர மோடி பற்றி விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்.

மத்தியில் மூன்றாவது அணி குறித்து...

அரசியலில் எதுவும் நிகழலாம். குறிப்பாக, இந்திய அரசியல் எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நிகழலாம். எனவே, எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் காத்திருப்பதே நல்லது. அதற்கு இன்னும் நீண்டகாலம் உள்ளது.

நம் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். வலுவான மத்திய அரசே அவர்களது தேவை. ஊழலற்ற நிலையும், பாதுகாப்பான சூழலுமே முக்கியம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பற்றி...

ஊழல் புகாரில் சிக்கிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஆனது. அதேபோல், கனிமொழி மீதும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்பட்டது. தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஊழல் அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை நாடே எதிர்பார்க்கிறது.

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரும் இருக்க வேண்டும் என்பதில் நிலவும் மாறுபட்ட கருத்துகளில் உங்களது நிலைப்பாடு...

லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை சி.பி.ஐ. விசாரிக்க முடியும்.

இந்தச் சூழலில், லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை சேர்த்தால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், பிரதமரின் அதிகாரம் வலுவிழந்து விடும்.

மேலும், அரசுக்கு நிகரான அமைப்பு உருவாக இது வழிவகுத்து விடும். பிரதமர் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டால் கூட, அவரது பதவியின் அதிகாரம் வலுவிழந்து விடும். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி, வெளிநாடுகள் இந்தியாவை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது.

இந்த விஷயத்தில், நான் தனிநபரை ஆதரிக்கும் நோக்கத்தில் இக்கருத்தை சொல்லவில்லை. பிரதமர் பதவி என்ற அமைப்புக்கு ஆதரவாகவே சொல்கிறேன். பிரதமராக இருப்பவர், முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. பிரதமரின் அதிகாரத்தை எதுவும் வலுவிழக்க செய்துவிடக்கூடாது.

ஆயினும், இந்த விவகாரத்தில், இறுதியான லோக்பால் வரைவு மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்.

தேசிய அளவிலான அரசியலில் ஈடுபடும் விருப்பம்...

அதுபோன்ற விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன். வாழ்க்கையை அதுவரும் வகையிலேயே ஏற்றுக்கொள்வேன். அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, தமிழ்நாடு முதல்வர் ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் எண்ணியது இல்லை. ஆனால் எப்படியோ ஆகிவிட்டேன்.

உங்களது இலக்கு...

இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்கான செயல்திறன் நமக்கு உள்ளது. அதற்காக, வலிமையான, தேசப்பற்று கொண்ட தலைவர் நமக்கு வேண்டும்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: