அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் ஒன்றாக இணைப்பதால் பாதிப்பு என்ன ?



பாதிப்பு என்ன?:
* டில்லியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் 40 கல்லூரிகளுக்கு ஒரு பல்கலை அமைய வேண்டும் என யூ.ஜி.சி., விதிமுறை உருவாக்கப்பட்டது. இந்தியளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைகள் தேவைப்படுகின்றன. இதனடிப்படையில் தமிழகத்தில் அனந்தகிருஷ்ணன் கமிட்டி அமைத்து, பரிந்துரையின் பேரில் புதிய பல்கலைகள் உருவாக்கப்பட்டன.

* கோவை, நெல்லை பல்கலைகளில் ஒரு "பேட்ச்' மாணவர்கள் வெளியேறிவிட்டனர். இவர்கள் மேற்படிப்புக்கு பிறமாநிலம், வெளிநாடு, செல்கையில் பல்கலையின் உண்மைத் தன்மை குறித்து அறியும்போது பிரச்னை வரலாம்.

* உயர்கல்விக்கென மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கும் ரூ. 5 கோடிக்கு யு.ஜி.சி., நிதி ஒதுக்கீடு செய்கிறது. கூடுதல் பல்கலைகள் இருந்தால் அதற்கேற்ப கூடுதல் நிதியை பெறலாம். இவற்றை ஒருங்கிணைப்பதால் ரூ. 5 கோடி மட்டுமே பெற முடியும்.

* 40 முதல் 50 கல்லூரிகளை வைத்து செயல்படுவதால், பல்கலைகளின் தரம் உயரும். அதேசமயம் மாநில அளவில் உள்ள 500 பல்கலைக்கும் ஒரே பல்கலை இருந்தால் அதன் நிர்வாகப்பளு அதிகரிக்கும். இதனால் ஆராய்ச்சிப் படிப்புகளில் பாதிப்பு ஏற்படும்.

* புதிய பல்கலைகள் மாணவர்களின் ஆராய்ச்சி, பயிற்சிக்காக உருவாக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரத்தாகும். கருத்தரங்கு நடத்த அனுமதி, நிதி பெற்ற இணைவிப்பு கல்லூரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

* பல்கலைகள் அதிகரிப்பதால் அதிகளவு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த வாய்ப்புள்ளது.

* சென்னை அண்ணா பல்கலையை சர்வதேச தரத்திலான ஆராய்ச்சிப் படிப்புக்கும், மற்ற பல்கலைகளை பாடத்திட்டம், தேர்வு மற்றும் நிர்வாகத்திற்கும் பயன்படுத்தினால் உயர்கல்வி சிறப்படையும் என மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

* உலகளவில் சீனாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப 2500 பல்கலைகள் உள்ளன. ஆந்திராவில் 4 தொழில்நுட்ப பல்கலைகள் உள்ளன. போக்குவரத்துக் கழகத்தை பிரிப்பது, ஒருங்கிணைப்பதால் பாதிப்பு வராது. ஆனால் தொடர்ந்து கல்வி கற்க வேண்டிய பல்கலைகளில் மாணவர் நிச்சயம் பாதிக்கப்படுவர்.

அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் குறித்து, ஒரு குழுவை நியமித்து ஆய்வு நடத்தி, பாதிப்புகள் குறித்து அறிந்து அதன் பரிந்துரையின் பேரில் பல்கலைகளை நிர்வகிக்கலாம். இதுகுறித்த அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர், ஆசிரியர், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தமிழகத்தில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளதால் மாணவர்கள், பெற்றோர் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியற் கல்லூரிகளை பிரித்து தி.மு.க., ஆட்சியின்போது சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லையில் அண்ணா தொழில் நுட்ப பல்கலைகள் உருவாக்கப்பட்டன. இப்பல்கலைகளை ரத்து செய்து ஒருங்கிணைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பல்கலைகளில் படித்து வரும் மாணவர், பெற்றோர் பெருங் குழப்பத்தில் உள்ளனர்.கோவை, நெல்லையில் ஒரு "பேட்ச்' மாணவர்களே முடித்து வெளியேறிவிட்ட நிலையில், மதுரையில் ஓராண்டு படிப்பை முடித்துள்ளனர். இப்பல்கலைக்கு கடச்சனேந்தல் பகுதியில் 85 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு, செய்து புதிய கட்டடம் கட்ட ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ. 28 கோடிக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. ரூ. ஒரு கோடி கைக்கு வந்து கட்டுமான பணிக்கு டெண்டரும் விடப்பட்டது. தற்போது இதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் இரண்டாம் ஆண்டிற்கு தேவையான புதிய ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனத்திற்கும் விளம்பரம் செய்யப்பட்டது. எம்.இ., பகுதி நேர படிப்புக்கும் பல நூறு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.



இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. கடந்த ஓராண்டில் 8க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பி.இ., 2ம் ஆண்டு வகுப்பு நேற்று துவக்கப்பட்டது. ஜூலை 11ல் முதுநிலை வகுப்புகள் துவங்க உள்ளன. இந்நிலையில் பல்கலையின் நிலை குறித்து எதுவும் தெரியாமல் அனைவரும் குழம்பியுள்ளனர். மாணவர், பெற்றோர் பல்கலை குறித்து நேரிலும், போனிலும் விசாரிக்கின்றனர்.

source.dinamalar

Post a Comment

0 Comments