தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க,அ.தி.மு.க தொகுதிகள் தேர்வு, சரியா ?

by 7:55 AM 0 comments
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தொகுதிகள் தேர்வு, வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு போன்றவற்றில் தி.மு.க., அதீத நம்பிக்கையுடன் செயல்பட்டுள்ளது. அதேநேரத்தில், அ.தி.மு.க., மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளது.

தி.மு.க., இந்த தேர்தலில், 119 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இதில், வேட்பாளர் தேர்வின் போது, குறைந்தபட்சம், 30 தொகுதிகளில் சரியான வேட்பாளர் தேர்வு செய்யப்படவில்லை என்ற குறை உள்ளது.சில தொகுதிகளில் குறிப்பிட்ட சிலரை நிறுத்தியிருந்தால், வெற்றி நிச்சயம் அல்லது கடும் போட்டியை கொடுக்க முடியும் என்ற நிலையில், அந்த தொகுதியில் சிபாரிசு காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் அல்லது தொகுதியில் அதிருப்தியை சம்பாதித்திருப்பவர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர்.இது தவிர, தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு, 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 25 இடங்கள் தி.மு.க., கண்டிப்பாக வெற்றி பெற முடியும் அல்லது கடும் போட்டியை கொடுக்க முடியும் என்ற நிலையிலானவை.

உதாரணமாக, சென்னையில் அண்ணா நகர், திரு.வி.க., நகர், மயிலாப்பூர் போன்றவை. அதுவும், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகளில், சம்பந்தமில்லாத வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தோற்று விடுவர் என்று தெரிந்தே, தி.மு.க.,வும் வேறுவழியின்றி அமைதியாக இருந்து விட்டது. இவ்வாறு தி.மு.க.,வின் 25 தொகுதிகள் காங்கிரசுக்கு சென்று விட்டன.அதேபோல, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட 30 தொகுதிகளில், 10 தொகுதிகள் அக்கட்சிக்கு சம்பந்தமில்லாதவை. வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, மதுரவாயல், திண்டுக்கல், சோழவந்தான், கோவில்பட்டி போன்ற தொகுதிகளில், தி.மு.க., போட்டியிட்டிருந்தால், கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்கலாம்.

ஆனால், தமிழகம் முழுவதும் பரவலாக இடம்பெற்றுள்ள கட்சி என்று காண்பிக்க, இத்தொகுதிகள் பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டன. இதனாலும், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாய், விடுதலைச் சிறுத்தைகளுக்கு சோழிங்கநல்லூர் உட்பட சில தொகுதிகள் சம்பந்தமின்றி ஒதுக்கப்பட்டன.இவையெல்லாம் சேர்த்து, 40 தொகுதிகளுக்கு மேல், தி.மு.க., தனது செல்வாக்கை விட்டுக் கொடுத்துள்ளது. இவை அனைத்துமே அ.தி.மு.க.,வுக்கு தான் சாதகமாக அமையப் போகிறது. ஏற்கனவே, அ.தி.மு.க.,வுக்கு சாதகமான தொகுதிகள் பட்டியல் இருக்கும் நிலையில், இவ்வாறு 40 தொகுதிகளை தெரிந்தே தி.மு.க., விட்டுக் கொடுத்துள்ளது, அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேநேரத்தில், அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டிலும் சரி, வேட்பாளர் தேர்விலும் சரி மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளது. தனக்கு வெற்றி வாய்ப்புள்ள பெரும்பாலான தொகுதிகளை அ.தி.மு.க., தன் வசம் வைத்துக் கொண்டது. மேலும், தி.மு.க.,வை போல 119 தொகுதிகளில் போட்டியிடாமல், 160 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணிக்காக விட்டுக் கொடுத்த தொகுதிகளில் சில தொகுதிகள் கிடைக்காவிட்டாலும், தான் போட்டியிடும் தொகுதிகளில் அதிகளவு வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வே இதற்கு காரணம்.இது தவிர, அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வில், தி.மு.க.,வுக்கு சாதகமான தொகுதிகள் மற்றும் வலுவான வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில், விட்டுக் கொடுத்துவிடாமல் கடும் போட்டியை ஏற்படுத்த அ.தி.மு.க., திட்டமிட்டது.

இதன் காரணமாக தான், கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து சைதை துரைசாமி நிறுத்தப்பட்டார். திண்டிவனம் இல்லாவிட்டாலும் அருகில் உள்ள மயிலம் தொகுதியை கண் வைத்திருந்த சி.வி.சண்முகத்துக்கு விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால், பொன்முடிக்கு கடும் சவால் ஏற்பட்டது.அதேபோல, திருப்புத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன் எளிதாக வெற்றி பெறுவார் என்று கருதப்பட்ட நிலையில், அங்கு ராஜ கண்ணப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆர்.கே.நகரில் சேகர்பாபு எளிதாக வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, வெற்றிவேல் வேட்பாளராக்கப்பட்டார். வில்லிவாக்கத்தில் நிதியமைச்சர் அன்பழகனை எதிர்த்து, ஜே.சி.டி.பிரபாகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இவை அனைத்தும், வி.ஐ.பி., வேட்பாளர்களுக்கு எதிராக கடும் போட்டியை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் செய்யப்பட்டவை. ஆனால், தி.மு.க., தரப்பில் இதுபோல, அ.தி.மு.க.,வுக்கு கடும் சவால் கொடுக்கும் வகையில், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படவில்லை.இதற்கு காரணம், அரசு ஊழியர் ஓட்டுகள், சிறுபான்மையினர் ஓட்டுகள், பாரம்பரிய தி.மு.க., ஓட்டுகள் மற்றும் இந்த அரசால் பலனடைந்தோர் ஓட்டுகள் எனக் கணக்கிட்டு, எப்படி இருந்தாலும் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை தி.மு.க.,வுக்கு இருந்தது தான்.தி.மு.க.,வின் அதீத நம்பிக்கை வெற்றி பெறப் போகிறதா அல்லது அ.தி.மு.க.,வின் முன் எச்சரிக்கை நடவடிக்கை வெற்றியை தரப்போகிறதா என்பது தேர்தல் முடிவில் தெரியும்.

news credit.dinamalar

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: